பொதுவேட்பாளர் விடையம்: தோல்வியடைந்த பின்னர் பேச்சுவார்த்தைகளை நடாத்த முடியாது! சுமந்திரன்

#SriLanka #Election
Mayoorikka
3 months ago
பொதுவேட்பாளர் விடையம்:  தோல்வியடைந்த பின்னர் பேச்சுவார்த்தைகளை நடாத்த முடியாது! சுமந்திரன்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். 

அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ளார்.

 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது, அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளரால் வெல்லமுடியாத போதிலும், சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேசத்திடம் கூறுவதற்கான களமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

 இருப்பினும் மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் கைச்சாத்திடவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இதுவரையில் தமிழரசுக்கட்சி எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

ஆனால் இத்தீரமானத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணில், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தீர்மானித்திருக்கும் நிலையில், அதன் ஓரங்கமாக சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எதிர்வருங்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு குறித்து வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி, தமிழ்மக்களின் கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக அக்கோரிக்கைகள் பலமற்றதாகிவிடும் எனக் கரிசனை வெளியிட்ட அவர், இம்முறை போன்று அடுத்தடுத்த ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 '2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித்தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிகமுக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும்' என்று தெரிவித்த சுமந்திரன், அதுமாத்திரமன்றி இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் என விசனம் வெளியிட்டார்.

 மேலும் அவரும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து விடுத்த அழைப்புக்கு அமைய சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு பொதுமேடை ஒன்றில் பதிலளிப்பதற்கு இணங்கியிருப்பதாகவும், அவர்களுடனும், ஏனைய வேட்பாளர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!