பதில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் : ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய சுமந்திரன்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் கடந்த வியாழக்கிழமை (01.08) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காகச் சென்றிருந்தார்.
அவர் உள்ளே சென்றபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கூட்டத்தை தொடர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியேறுவதை அவதானித்தார்.
யாழ்ப்பாண அரசியல்வாதி ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய முக்கியமான விடயங்களில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) நியமனம் தொடர்பில் தற்போது நிலவும் சர்ச்சைகள் மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு நெருக்கடியும் அடங்கும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணராகக் கருதப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்டக் கருத்தையும் கேட்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முடியும் வரை பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தினால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தானும் ஒருவராக இருப்பதால், தேர்தல் மீறல் மனுக்கள் வடிவில் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை அடுத்து ஜனாதிபதியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு ரீதியில் நியமனம் செய்யும் அதிகாரம் என்ற வகையில், ஜனாதிபதிக்கு நியமனம் வழங்குவதற்கு கடமைப்பட்டிருப்பதாக சுமந்திரன் விளக்கினார். ஐ.ஜி.பி பதவி தானாக முன்வந்து ராஜினாமா செய்தல் அல்லது ஒரு ஐ.ஜி.பி.யின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் வெற்றிடமாக மாறிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.
புதிய பொலிஸ் மா அதிபரை நியமித்தால் தாம் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி கருதினால், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி ஆட்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான சட்ட சவால்களுக்கு உள்ளாகுவதை ஜனாதிபதி தவிர்க்க முடியும் என ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, அந்த அம்சத்தையும் கவனிப்பதாகக் கூறினார்.