தகைமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் சூழ்நிலை!
ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மூலம் விளம்பரம் பெறும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பலர் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனவே பல்வேறு காரணங்களை முன்வைத்து அநாவசியமாக தேர்தலில் ஈடுபடுவதினை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் அரசியல் தொடர்பில் எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.