வயநாடு அழிந்ததை போல் பொன்னாவெலி, கௌதாரிமுனை கிராமங்கள் அழிவடையும்: சிறிதரன் ஆதங்கம்
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு கிராமம் அழிவடைந்ததை போன்று இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொன்னாவெலி கிராமமும் மற்றும் கௌதாரிமுனை கிராமமும் அழிவடைந்து, இலங்கையில் வரைபடத்தில் இருந்தே இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்த வயநாடு இப்போது காணாமல் போயுள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை காணவில்லை. ஒரே இரவில் நடந்த அனர்த்தத்தில் ஒரு ஊரே காணாமல் போயுள்ளது.
ஊரை காணவில்லை, இங்கிருந்த மக்களை காணவில்லை என கதரியழுதவர்களை இணையத்தளங்களில் பார்த்தேன். மனிதனின் கண்டுபிடிப்புகள் இங்கே தோற்றுப்போயுள்ளன. இயற்கை பேரழிவுக்கு முன்னால் மனிதன் மண்டியிட்டு கிடக்கின்றான் என்பதையே இந்த சம்பவம் எமக்கு பாடமாக காட்டியுள்ளது. சாதி மதம் இன்றி, ஊர் கடந்து எந்த வேறுபாடுகளும் இன்றி உதவுகின்ற மக்களை பார்க்கின்றோம். முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட சில கிராமங்களையும் காணவில்லை.
தாயை காணவில்லை, தந்தையை காணவில்லை என்று பிள்ளைகள் கதறுவதை பார்க்கும் போது மனம் வெதும்பியது. இது இயற்கை பேரிடராகும். இந்த நிலைமைகளை பார்க்கும் போது 2008, 2009 காலப்பகுதியில் எமது மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு போன போது நடந்த விடயங்களே எனக்கு நினைவுக்கு வந்தது. வயநாடு நிலைமை இயற்கையானது.
ஆனால் இங்கே நடந்தது செயற்கையானது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னாவெலி கிராமமும் மற்றும் கௌதாரிமுனை கிராமமும் இலங்கையின் வரைபடத்தில் இருந்தே காணாமல் போகப் போகின்றது.
இந்த இரண்டு கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும். அங்குள்ள இயற்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கேயும் ஒரு வயநாடு உருவாகிவிடக் கூடாது என்று இந்த சபையில் வலியுறுத்துகின்றேன் என்றார்.