மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களின் கொடுப்பனவுகளை கணக்காய்வுக்கு உட்படுத்துங்கள்; முரளி வல்லிபுரநாதன்
சிந்துஜாவின் அநியாயச் சாவை அடுத்து மன்னார் வைத்தியசாலையில் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதை தடுத்து நிறுத்த கடந்த காலத்தில் வைத்தியர்களின் வரவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான கணக்காய்வுகளை (audit ) மேற்கொண்டால் பல இலட்சம் ரூபாய்களுக்கான மோசடிகளை கண்டுபிடித்து மீளப்பெற முடியும் என்பதுடன் இந்த மாபியா குழுவினரை ஒழுங்காக வேலைக்கு வர வைக்க முடியும் என்று நான் தெரிவித்திருந்தது பலருடைய வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இதில் முக்கியமானவர் மாதத்தில் 2 வாரங்கள் வேலை செய்யும் நோயின் தாய் (Mother of every other 2 week syndrome) என மன்னாரில் கடந்த காலத்தில் அறியப்பட்டவர். இந்த வைத்திய நிபுணர் மாதத்தில் 2 வாரம் மட்டும் தான் வேலைக்கு வந்ததும் அல்லாமல் ஏனைய மருத்துவ நிபுணர்கள், தனது ward இல் உள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கும் அதே சட்டவிரோத சலுகை வழங்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்தி மன்னார் வைத்தியசாலையை முழுமையாக சீரழித்தவர்.
இன்று அறுபதுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலையில் வேலை செய்தும் ஒரு நாளில் 20 வரையிலான வைத்தியர்கள் மட்டுமே சமூகம் அளிக்கும் கேவலமான நிலையை ஏற்படுத்தி கிளினிக் முதலான அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும் நோயாளிகள் பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்பதற்கும் இவரே மூல காரணி ஆவார்.
இப்போதும் யாழ்ப்பாணத்தில் மாதம் முழுவதும் வேலை செய்வதாக கணக்கு காட்டிக் கொண்டு கொழும்பில் இடையிடையே காலத்தை கழித்து வருபவர். கொரோனா நோய் உச்சம் அடைந்திருந்த காலத்தில் இந்த மோசடிகளின் தாய் வைத்தியசாலைக்கு ஒரு நாள் செல்லாவிட்டால் கூட நோயாளிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக தனது மனச்சாட்சிக்கு பிழையாக இருக்கிறது என்று ஒரு புளுகுமூட்டை பதிவு ஒன்றை சமூக ஊடகங்களுக்கு வெளியிட்டு இருந்தார்.
அதை இவரது உண்மையான சொரூபம் தெரிந்த மன்னாரை சேர்ந்த வைத்தியர்கள் நகைச்சுவை துணுக்காக எனக்கும் பகிர்ந்து இருந்தார்கள். இவர் தனது உத்தியோகபூர்வ நாட்குறிப்பு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களில் போலியான தகவல்களை தெரிவித்து பல இலட்சம் ரூபாய்களை சுருட்டியவர் என்பது கடந்த கால நோயாளிகளின் கட்டில் குறிப்புகள் (Bed Head Ticket ) மற்றும் clinic குறிப்புகளை பரிசோதிப்பதன் மூலம் இலகுவாக நிரூபிக்க முடியும்.
இந்த ஆவணங்கள் 10 வருடங்களுக்காவது வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விதி காணப்படுவதனால் இலகுவாக தப்பிக்க முடியாது. சிந்துஜாவின் சாவை அடுத்து மன்னார் வைத்தியசாலையில் வேலைக்கு வராமல் சம்பளம் பெறும் மருத்துவ மாபியா ஊழல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் குழம்பிப் போயுள்ள 2 வார நோயின் தாய் தனது மோசடிகள் அம்பலமாவதை தடுப்பதாக நினைத்துக் கொண்டு சில வைத்தியர்கள் தமது சொந்த இனமான வைத்தியர்களை கட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ஆதரவாக மட்டக்களப்பில் மாதம் முழுநாளும் வேலை செய்வதாக கணக்கு காட்டிக் கொண்டு கொழும்பில் பகிரங்கமாக தனியார் வைத்தியசாலையில் அறிவிப்பு பலகை போட்டு நோயாளிகளை பார்த்து வந்த கேவலமான பிரகிருதியும் அதனுடன் இணைந்த ஏனைய மருத்துவ மாபியாக்களும் பதிவிட்டு வருகின்றனர். இவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான்.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ". நீங்கள் எப்படி தான் மோசடி செய்து பணம் சம்பாதித்தாலும் இறுதியில் உங்கள் கர்மவினையை தவிர எதுவும் உங்களை சேர போவதில்லை. நீங்களே உங்களுடைய பதிவுகள் மூலமாக இந்தப் பிறவியிலேயே தண்டனை பெறுவதற்குரிய நிலையை ஏற்படுத்தினால் அடுத்த பிறவியிலாவது நிம்மதியான வாழ்வு கிட்டும்.
-சமுதாய மருத்துவ நிபுணர்
முரளி வல்லிபுரநாதன்