காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் 14988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன!
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் இதுவரை 14988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சபை உறுப்பினர் ரி. யோகராஜா தெரிவித்தார்.
இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யும் செயற்பாடு இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நாம் காலத்தின் அடிப்படையில் மூன்று பகுதிகளாக பிரித்துள்ளோம்.
இவற்றில் நாம் முழுமையான விசாரணைகளாக இறுதிக் கட்டத்தை நெருங்கியவையாக 5791 முறைப்பாடுகளுக்கான விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளோம். இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் 75 முறைப்பாட்டாளர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 34 விண்ணப்பதாரர்கள் வருகை தந்திருந்தனர்.
அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளைய தினம் மன்னாரில் இதேபோன்று விசாரணைகள் இடம்பெற உள்ளன. மன்னாரில் 78 முறைப்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.