ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு: சுமந்திரனை சந்தித்த நாமல்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்காக தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் சிறீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இக் கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாண பொறுப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ வெற்றி பெறும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக M.A.சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ஸ தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதாக கூறிய நாமல் ராஜபக்ஸ, இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக M.A.சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி பதிலை வழங்குவதாக M.A.சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ஸவிடம் கூறியதாக கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.