காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்கு விசாரணையில் பிரசன்னமாகும் இராணுவ புலனாய்வாளர்கள்!
இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோர் மற்றும் வன்னியில் பாரிய புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, புலனாய்வு அதிகாரிகளின் பரவலான கண்காணிப்பு மற்றும் கேள்விகளால் தமிழ் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆழ்ந்த அச்சமடைந்துள்ளனர்.
இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமற்போன விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் தாயாரால், தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரும் வழக்கு மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி குறித்த வழக்கு விசாரணையும் அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களை பகிரங்கமாக அச்சுறுத்தும் வகையில் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற வளாகத்திலும் அதனைச் சுற்றியும் நடமாடியதை வடக்கின் மக்கள் பிரதிநிதியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாயும் வெளிப்படுத்தியுள்ளனர்.
“நான் நீதிமன்றத்திற்கு வரும்போது அக்கா உங்களுக்கு இன்று வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றார்கள்,” என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஓகஸ்ட் 8ஆம் திகதி பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் வெளியிலும் நடமாடுவதால் தமிழ் தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் விசாரணைக்கு வருகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
எங்களுக்கு இந்த மிரட்டல் தொடர்கிறது. அவர்கள் உள்ளேயும் வெளியேயும் இருக்கும்போது உண்மையைச் சொல்ல நாங்கள் பயப்படுகிறோம். எங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை." ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பதால், தன் மற்றும் தனது பிள்ளைகளின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என, ஈஸ்வரி எச்சரித்துள்ளார். “எங்களுக்கு சுதந்திரமாக கதைப்பதற்கு உரிமையில்லை என்பதை கூற வேண்டும். நிறைய விடயங்கள் கதைப்பதற்கு இருக்கின்றது. ஊடகத்தில் கதைத்தால் எங்களது உயிர் இருக்குமா இல்லையா? என்பது எமக்குத் தெரியாது.
எங்கள் பிள்ளைகள் கடத்தப்படுவார்களோ என்ற அச்சுறுத்தலும் இருப்பதால் ஊடகங்களுக்கும் தணிக்கை செய்தே கருத்து வெளியிடுகின்றோம்." காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் தலைவி வெளிப்படுத்திய உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில், அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், எம்.பி, செல்வராசா கஜேந்திரன், அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்த உறவினர்கள் குழுவும் உயிருக்குப் பயந்து திரும்பிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
"இங்கு வெளிப்புறத்தில் எங்கு பார்த்தாலும் அரச புலனாய்வுப் பிரிவினரும், சிஐடி, டிஐடி என சொல்லக்கூடிய தரப்பினர் இங்கு நிறைந்து கிடப்பதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இங்கு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்கூட திரும்பிச் சென்றுள்ளனர். ஏனெனின் இங்கு நின்றால் ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் திரும்பிச் சென்றுள்ளனர்.
" பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக கருத்துக்களை வெளியிடுவதை தடுக்க அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் மக்கள் பிரதிநிதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆட்கொணர்வு மனு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமற்போன முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்காக முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல், இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் சரணடைந்த தனது மகன் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டு காணாமல் போனதாக முறைப்பாடு செய்த தமிழ்ப் பெண், நீதிமன்றத்தில் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.
“தனது மகன் 2009 போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் முல்லைத்தீவு முகாமுக்குள் சரணடைந்ததாகவும் இராணுவ கட்டுப்பாட்டுக்குளேயே அவர் பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பிறகு அவரை எங்கும் தான் காணவில்லை என்றும் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றும் தான் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அரசாங்க அதிகாரிகள் அரச ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களை அணுகியும் எதுவிதமான பலனும் தனக்கு கிடைக்காதபடியினால் நீதிமன்றை நாடி இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் மன்றுக்கு கூறியிருந்தார்.” இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாக 58ஆவது படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன நீதிமன்றில் தெரிவித்த போதிலும் அவர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
பின்னர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கிய ஆவணம் மாத்திரமே தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய தீர்ப்பில், 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் குறைந்தது ஒருவரையேனும் இராணுவத்தினர் காணாமல் ஆக்கியுள்ளதாக, வவுனியா மேல் நீதிமன்றம் 16 டிசம்பர் 2022 வெள்ளிக்கிழமை முதல் தடவையாக ஒப்புக்கொண்டது.
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்டோரின் கதிக்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும் என வன்னி நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளன.