கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீர்!
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி வருகின்றது.
அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி மாசினை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு பெருக்கமும் ஏற்படுகின்றது.
குறித்த பகுதிக்கு அருகில் மாணவர்களின் வகுப்பறைகளும், பாடசாலைக்கு செல்லும் வாயிலும், பாடசாலை மாணவர்கள் ஒன்றுகூடும் இடமும் காணப்படுகின்றது.
இந்த நிலையில், துர்நாற்றத்தினாலும் மற்றும் நுளம்பினாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன், அந்த வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி சூழல் மாசுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் அப்பகுதியில் உள்ள அரச திணைக்களமும், கரைசசி பிரதேச சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
பொறுப்புள்ள அரச திணைக்களம் இவ்வாறு சமூகப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.