மக்கள் புதல்வன் சஜித் பிரேமதாசவின் வாழ்க்கை சரித்திரம்!
இலங்கையில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார்.
சஜித் பிரேமதாச இன்று நாட்டு மக்கள் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு தலைவர்.
தனது தந்தையான மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பாதையில் பயணிப்பவர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச – ஹேமா பிரேமதாச ஆகியோரின் புதல்வரான இவர் 1967இல் பிறந்தார்.
இவர் பிறந்த காலகட்டத்தில் தந்தை மத்திய கொழும்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
சஜித் பிரேமதாச கொழும்பு றோயல் கல்லூரியிலும், மில் ஹில் பாடசாலையிலும் கல்வி கற்று, இலண்டன் பொருளியல் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார்.
அங்கு அரசியல் விஞ்ஞானம், வர்த்தகத் துறைகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார். அத்தோடு வெளிநாட்டு மாணவரொருவருக்கு கிடைப்பதற்கரிய மாணவர் தலைவர் பதவியை அங்கு பெற்றுக்கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்திற்கான பட்டம் பெற்றவர். ஐக்கிய அமெரிக்காவில் செனட் சபையில் வெளிநாட்டு உறவுகள் குழுவின் சிறப்பு விருது பெற்றவர். அங்குள்ள பிரபல செனட் உறுப்பினரான லரி பிரெஸ்லரின் கீழ் பணிபுரிந்தார்.
அங்கு ஜோன் மெக்கான் ஜோன் கரி போன்ற முக்கியமான செனட் சபை உறுப்பினர்களுடன் சந்திப்புகளையும் மேற்கொண்டார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட இவர் 1993 ஆம் ஆன்டில் இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு திரும்பினார்.
தந்தையின் ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக இணைந்து அரசியலில் இறங்கினார். 2000 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2000ஆம் தேர்தலில் ஹம்பாந்தோட்டையின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர். 2001 ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் சுகாதாரத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2011 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார். 2015 இல் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019 நவம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 41.99% வாக்குகள் பெற்று இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தோற்றார்.
தந்தையின் வழியில் ஜனசுகய திட்டத்தை ஆரம்பித்து ஹம்பாந்தோட்டையில் வறுமையை ஒழிப்பதற்காக பெரும் பங்காற்றினார்.
ஹம்பாந்தோட்டையில் முழு நாட்டிலும் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றார். 2019இல் கலாசார அமைச்சுப் பதவியும் இவருக்கு கிட்டியது. 2015 முதல் வெற்றிகரமாக வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னோடியாக செயற்பட்டு மக்கள் புதல்வன் என்ற நற்பெயரைப் பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து 2019 திசம்பரில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டார்.
பின் 2020 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.