யார் இந்த தியாக தீபம் திலீபன்! ஏன் இவர் அனைவராலும் போற்றி அனுஸ்டிக்கப்படுகிறார்?
உலகில் சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனம். நடுத்தர வர்க்கம் என மூன்று வகையானவர்கள் வாழ்கிறார்கள்.
அவ்வகையில் பெரும்பான்மை இனங்களால் அமெரிக்காவில் இருந்து ஆப்கானிஸ்தான் வரைக்கும் சிறுபான்மை இன, மொழி, ஜாதியர் நேரடியாகவும் மறை திரையிலும் மனதாலும் உடலாலும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
நடுத்தர வர்க்கம் இருதலைக் கொள்ளிபோல இரு தரப்போடும் உறவாடி வென்று விடுகிறார்கள். சிறுபான்மை இனம் கடைசிவரைத் தமது உரிமையை பெற அகிம்சையாலும் ஆயுதத்தாலும் போராடி வென்றவர்களும் தோற்று அடிமை வாழ்வு வாழ்ந்து மடிந்த வரலாற்கள் பல உண்டு.
ஆசியாவை விட ஐரோப்பாவைவிட அமெரிக்காவை விட ஆபிரிக்காவிலேயே இக் கொடுமை அதிகம். அக்கோர்வையில் இந்து சமுத்திர எல்லைக்குள் சொர்க்கபுரி என புராணங்கள் கூறும் அழகுமிகு இலங்கையும் ஒன்று. ஆங்கிலேயர் இலங்கைக்கு ஆழும் தகமையை கொடுத்து இலங்கை பெரும்பாண்மை இனமான சிங்களம் தமிழ் பேசும் மக்களை ஒற்றுமையாக ஆழ வழி விட்டு தன் ஆதிக்கத்தை மீள் ஏற்பு செய்துகொண்டது.
அதன் பின்னர் சிங்கள தமிழ் மக்களும் அரசியல் தலைவர்களும் இணைந்து நாட்டையும் மக்களையும் சிங்கப்பூரே இலங்கையை போல வரவேண்டும் என கூறும் அளவிற்கு நல்லாட்சியும் அவிபிருத்தியும் ஏற்பட்டது.
அப்பொழுது இலங்கைக்கு சிலோன் என பெயர் இருந்தது. பின்னர் சில சிங்கள இன துவேச அரசியல் சாணக்கியர்களால் சிறீலங்கா என பெயர் மாற்றம் பெற்றது. அப்பொழுதுதான் தமிழர்களை கறிவேப்பிலையாக சிங்களவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதை தமிழ் தரப்பு உணர ஆரம்பித்தது.
அப்பொழுதும் அரசில் அங்கம் வகித்த தமிழ் ஆட்சியாளர்கள் தமது சலுகைகளுக்கும். பதவிகளுக்கும் ஆசைப்பட்டு அடக்கி சிங்கள பேரினவாதத்துடன் இணைந்தே சென்றனர். ஆனால் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் பாகுபாடு தரப்படுத்தல் ஏற்பட சில இளைஞர்கள் விழித்து எதிர்க்க ஆரம்பித்து துண்டுப் பிரசுரப் போர் தொடுத்தனர்.
அப்பொழுதுதான் சிலோன் சிறீலங்கா என மாற்றப்பட்ட காலம் ஆகும். சிறீலங்கா “ஶ்ரீ” என வாகனங்களுக்கும் சிங்கள நாமம் சூட்டப்பட்டது. இதெல்லாம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற பார்வை கண் திறக்ப்பட்ட காலம்.
சில இளைஞர்கள் பல இளைஞர்களாக மாறினர். அகிம்சையால் போராடிய இளைஞர்களும் ஆயுதம் ஏந்த முடிவுசெய்து ஒரு குழுவாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல கூறாகி இயங்கி சிங்கள படையை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு அயல் நாடான இந்தியா தன்னலத்தோடு உதவியது. இவ்வாயுத பெரிய புரட்சி அமைப்புக்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும்.
அவ்வியக்கத்தில் அரசியல், ஆயுத பிரிவு என இரு பிரிவு இருந்தது. அரசியல் பிரிவில் பல பட்டதாரிகளும் இணைந்து இயங்கினார்கள்.
அதில் ஒருவரே திலீபன் எனப்படும் பார்த்திபன் ஆவார். அந்த வகையில் லங்கா4 ஊடகம் அவரைப் பற்றி சில எமக்கு தெரிந்த குறிப்புக்களை தருவதில் பெருமை கொள்கிறது.
ஆம் யார் இந்த தியாக தீபம் திலீபன் ஏன் இவர் அனைவராலும் போற்றி அனுஸ்டிக்கப்படுகிறார்? வாருங்கள் அலசலாம்.
15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி உயிர்த்தியாகம் செய்த ஒப்பற்ற மாவீரனின் நினைவலைகள் இதோ..
யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் பார்த்திபன். தந்தையார் பெயர் இராசையா. இவர் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர்.
தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாள் செப்டம்பர் 26 1987 ல் உயிரிழந்தார்.
திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். என கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவரின் பனிரெண்டு நாள் போராட்டம் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.
முதல் நாள் போராட்டம் தொடங்கிய அன்று திலீபன் மேடை ஏறி உண்ணாவிரத போராட்டத்தைப் பற்றிய விளக்க உரை கொடுத்துவிட்டு, அவர் வாசிப்பதற்காக சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தன்னிடம் வைத்திருந்தார்.
மேலும் அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், திலீபனை சந்தித்தார். இரண்டாம் நாள் அதிகாலை திலீபன் எழுந்து சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு மேடை ஏறினார்.
உடல் சக்தி விரயமாகும் என்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்தினார். அன்றும் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.
மூன்றாம் நாள் திலீபன் விழிக்கும் போதே தண்ணீர் வற்றி உதடுகள் வெடிப்படைந்திருந்தன. மேலும் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மருத்துவ சோதனைக்கு மறுத்துவிட்டார்.
நான்காம் நாள் திலீபனால் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல்போனது.
ஐந்தாம் நாள் அவரால் எழவே முடியவில்லை. சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கியது. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ கர்னல் அவரை சந்தித்து பேசிவிட்டு, மேலிடத்தில் பேசுவதாக சொல்லியிருந்தார்.
ஆறாம் நாள் திலீபனால் பேசமுடியாமல்போனது. ஏழாம் நாள் இந்திய பத்திரிகைகள் இலங்கை சென்றிருந்தது, அவர்களிடம் திலீபன் “எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்” என்றார்.
எட்டாவது நாள் அவருடன் சேர்ந்து பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள்.
ஒன்பதாவது நாள் திலீபனால் கண் திறக்கமுடியவில்லை. அன்று இந்தியத் தூதுவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இடையே இரண்டுகட்டமாக பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது. பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 52 எனவும், இரத்த அழுத்தம் 80/50 எனவும் இருந்தது.
அவர் அன்று “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” என்றார்.
பதினோராவது நாள் உடல் அசைவற்று இருந்தார் திலீபன். அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத்தா. உன் சீருடைகளை எனக்குத்தா” என்ற பாடலை அங்கிருந்தோர் பாடினார்கள்.
அவர் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், பனிரெண்டாவது நாள் காலை 10.48 மணிக்கு அந்த வீரன், ஒரு சொட்டு தண்ணீர், ஒரு பருக்கை உணவு என எதையும் உட்கொள்ளாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்துகொண்டு வீர மரணம் அடைந்தார்.
இவரை இந்திய அரசு அவரை இறக்க விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை இவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் இவருக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நினைவுத்தூபி எழுப்பப்பட்டது. ஆனால், 1996-ம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தினை கைப்பற்றியதும், அவரின் நினைவுத்தூபி இலங்கை இரணுவத்தால் இடிக்கப்பட்டது.
மீண்டும் அவரது நினைவுத்தூபி எழுப்பப்பட்டது . ஆனால் அதன் பிறகு 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் அவரின் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டப்பட்ட நினைவுத் தூபியிலேயே இன்றுவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்திலும் கூட ஆயிரம் குறுக்குவழிகளை கையாலும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், 12 நாட்கள் கடந்தும் கொண்ட கொள்கையில் உறுதியாக, நீர்கூட பருகாமல் வீரமரணம் அடைந்த அவரது தீர்கத்திற்காகவாவது நாம் அவரை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்..
திலீபன் மறைந்தாலும் இதுவரை அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பபடவில்லை இன்னமும் திலீபன் பசியோடுதான் இருக்கின்றார்.