இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறும் ஹரிணி அமரசூரிய! யார் இவர்?

#SriLanka #Prime Minister
Mayoorikka
2 hours ago
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறும் ஹரிணி அமரசூரிய! யார் இவர்?

இலங்கை அரசியல் வரலாற்றில் தாய், மகள் என இரு பெண்கள் இது வரை பெண் பிரதமர் என்ற பதவி வகித்துள்ளனர்.

 இன்று 3வது பெண் பிரதமர் என்ற அடையாளத்தை நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய பெறுகின்றார்.

 1960. 07 .21 முதல் 1965 .03. 25 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்து உலகில் முதல் பெண் பிரதமர் என்ற அடையாளத்தை பெற்றார். 1970 முதல் 77 வரை மீண்டும் பிரதமரானார். 

 அவரது புதல்வி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 .08. 19 முதல் 1994. 09.12 வரை பிரதமராக பதவி வகித்தார். 1994 அவர் ஜனாதிபதியாக அவ ரது தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1994 .11.14 முதல் 2000 .08.09 ஆம் திகதி வரை அவர் பிரதமராக பதவி வகித்தார்.

 இலங்கை கண்ட பெண் பிரதமர்கள் வரிசையில் இன்று 3வது பெண் பிரதமராகவும் இலங்கையின் 16ஆவது பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார் ஹரிணி அமரசூரிய. ஆம் யார் இந்த ஹரிணி அமரசூரிய வாருங்கள் அலசலாம்...

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின் கொள்கைகளில் பிடித்துப் போய் அனுர தலைமையிலான ஜேவிபி கட்சியில் இணைந்து இன்று அவருடைய அரசாங்கத்தில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 06 ஆம் திகதி பிறந்தார்.

 பௌத்த மதத்தை பின்பற்றும் இவர் திருமணமாகாதவர். இரண்டு உடன்பிறந்தவர்கள் அவருக்கு உள்ளனர். 

 2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அவர் தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

 கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வி பயின்ற கலாநிதி ஹரிணி அமரசூரிய, பின்னர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தனது முதல் பட்டப்படிப்பைப் பெற்றார்.

 சிட்னியில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் அப்ளைடு ஆந்த்ரோபாலஜி மற்றும் டெவலப்மென்ட் கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2011 இல், எடின்பேர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேச சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.

 ஹரிணி அமரசூரிய 2020 முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகக் கற்கைகளுக்கான மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.

 கருத்தியல் ரீதியாக மைய-இடதுசாரியாகவும், தாராளவாதியாகவும் விளங்குகிறார். இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை ஆகியவை பற்றிய தனது ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

 தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். 

நமது கல்வி நிறுவனங்களின் கலாச்சாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். 

மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகளுக்கு இவர் சொந்தக்காரராவார்.

images/content-image/2024/1727194088.jpg

 இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தை பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறையில் திறமையின்மை போன்ற அழுத்தமான பிரச்சனைகளில் ஹரிணி நன்கு அறியப்படுகிறார். தற்போது இலங்கை உள்ளூர் இலாப நோக்கற்ற அமைப்பான நெசுட்டு என்ற அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக வேலை செய்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டில் இலவசக் கல்விக்காக ஆர்ப்பாட்டங்களில் இணைந்த பிறகு தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார்.

 குழந்தை பாதுகாப்பு மற்றும் உளவியல் சமூக பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக சேர்ந்தார்.

 ஹரிணி 2019 ஆம் ஆண்டு தேசிய அறிவுஜீவிகள் அமைப்பில் சேர்ந்தார். 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரசாரம் செய்தார். 12ஓகஸ்ட் 2020 அன்று, இவர் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைய தேசிய பட்டியல் வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். 

அநுர குமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரையின் போது முனைவர் ஹரிணி அமரசூரியவின் பங்கு தனித்து தெரிந்தது. தேர்தலுக்கு முன்பு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  தற்பொழுது இவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஏற்கனவே பிரதமராக இருந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பிரதமர் பொறுப்பு வகித்து வந்த தங்களின் கணவர்கள், தந்தைகள் இறந்த பின்னரே அந்த பொறுப்பிற்கு வந்தனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்று தெற்காசியா முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை காண இயலும். 

இந்த நாடுகளில் உருவான பெண் தலைமைகள் அனைவரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் ஹரிணியை பொறுத்தமட்டில் இவர் ஒருவர் தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணி ஏதுமின்றி பிரதமர் ஆன முதல் பெண்ணாவார்.

இவர் பிரதமராக பதவி வகிக்கும் காலகட்டத்தில் இலங்கை எவ்வாறான மாற்றங்களை சந்திக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.