பண்டிட் ராணி என்று அழைக்கப்படும் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு
வாழ்வு எல்லா பக்கங்களிலிருந்தும் தனக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோதும், அந்த இருளில் தன் வாழ்வுக்கான வெளிச்சக் கீற்றை தானே ஒளிரச் செய்தவர்தான் பண்டிட் ராணி (Bandit Queen) என்றழைக்கப்படும் பூலான் தேவி.
நம்மில் பெரும்பாலானோர் கிண்டல் கேலிக்குரிய ஒரு பாத்திரமாக இப்பெயரைக் கடந்து வந்திருக்க, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு அவர் வாழ்வில் மறைந்து கொண்டிருக்கிறது.
1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி மூலா, தேவி தின் மல்லா என்ற தம்பதியருக்கு நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தை பூலான் தேவி என்று பெயரிடப்பட்டார். மல்லா எனப்படும் படகோட்டி இனத்தைச் சேர்ந்த இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.
சிறுவயதிலிருந்தே ஆங்காரமான ஒரு முக பாவத்திற்கும் வார்த்தை சூட்டிற்கும் பெயர் போனவர் பூலான். தனது பதினோராவது வயதில், தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்காக தன்னைவிட மூன்று மடங்கு வயதில் பெரியவரை மணக்க நேர்ந்தார் பூலான்.
வாழச் சென்ற இடத்தில் பலமுறை தன் கணவரால் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டு, 11 வயது சிறுமி அறியவொன்னாத பல துயரங்களைச் சுமக்கும்படி ஆனது. பூலானின் வார்த்தை சூட்டைத் தாங்க முடியாத மாமியார் வீட்டினர் அவரை அவர் வீட்டிற்குத் திருப்பி அனுப்பினர்.
தாய் வீட்டிற்கு வந்தும் வாழ்வு அவ்வளவு இனிமையாக இல்லை. தன் சொந்த உறவினர்களாலேயே தாக்கப்பட்டு மூன்று நாள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். சிறையில் காவல்துறை அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு தொடர, சிறையை விட்டு வெளியேறி தன் கணவர் ஊருக்கே சென்றார்.
கணவரின் தொந்தரவுகளும் தாங்க முடியாத நிலையில் 1979 ஆம் ஆண்டு பண்டிட் இன கொள்ளையர்கள் கும்பலால் கடத்தப்பட்ட பூலான் தன் வாழ்வை அவர்களுடனே தொடரும்படி ஆனது. புந்தேல்கண்ட் பகுதியானது இன்றளவும் மிகுந்த வறட்சிக்குப் பெயர் போனது.
இப்பகுதி மக்கள் பொதுவாகவே பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை தேடுவது வழக்கமாக இருந்தது. இப்படிப் போக முடியாதவர்கள் அப்பகுதிகளிலேயே குழுக்கள் அமைத்து பணம் படைத்தவர்கள் வீடுகளில் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் என இவர்கள் அழைக்கப்பட்டனர்.
சொல்லப்போனால் வெளிநாட்டுப் பாணியில் ராபின்ஹூட் திரைப்படங்களில் பார்ப்பது போல் கொள்ளையர்களின் வாழ்க்கை இருந்தது. அப்படி ஒரு குழுவால் கடத்தப்பட்டு அக்குழுவின் தலைவர் பாபு குஜ்ஜார் என்பவரால் மூன்று நாள்கள் தொடர் பாலியல் வன்கொடுமையை அனுபவிக்க நேர்ந்த பூலான், மூன்றாம் நாள் இறுதியில் விக்ரம் மல்லா என்ற குழு உறுப்பினரால் மீட்கப்பட்டார்.
பாபு குஜ்ஜாரைக் கொன்றுவிட்டு பண்டிட் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விக்ரம் மல்லா. விக்ரமுடன் சேர்ந்து தானும் அக்குழுவில் ஐக்கியமாகத் தொடங்கிய பூலான், துப்பாக்கி சுடுவது முதல் பல உயர் சாதி மக்கள் வீட்டில் கொள்ளை அடிப்பது வரை தன் போக்கையே வேறு விதத்தில் அமைத்துக் கொண்டார்.
கொள்ளையர்கள் குழுவில் ஒரே ஒரு பெண் என்று அழைக்கப்பட்ட பூலான் ஒவ்வொரு கொள்ளை முடிவிலும் துர்கா கோயிலுக்குச் செல்வதும் கடவுளை வணங்குவதும் வழக்கமாக அமைந்திருந்தது.
காலங்கள் நகர, கூட்டத்தில் பெண் துணையைத் தான் மட்டும் அனுபவிக்கும் விக்ரம் மல்லாவைக் கண்டு மற்ற உறுப்பினர்கள் பொறாமை கொண்டனர். அந்தக் கொள்ளைக்குழு ராஜ்புத்கள், மல்லாக்கள் என்று இரண்டாகப் பிரிந்தது.
ராஜ்புத்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விக்ரமை சுட்டுத் தள்ளிவிட்டு, பூலான் தேவியை ஓர் அறையில் பூட்டி சித்திரவதை செய்தனர்.
சித்திரவதைகளைத் தாங்க முடியாத அவர், அங்கிருந்து தப்பி மன்சிங் மல்லா என்ற விக்ரமின் நண்பருடன் இணைந்து கொள்ளைத் தொழிலைத் தொடர்ந்தார்.
கொள்ளைத் தொழிலுடன் எப்படியாவது தன்னை பாதிப்புக்கு உள்ளாக்கிய முக்கிய ராஜ்புத்களான ஸ்ரீராம் மற்றும் லாலா ராம் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கருதினார்.
சம்பவத்திற்குப் பின் தலைமறைவான பூலான் மற்றும் குழுவினரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் ஆதரவைத் திரட்டிய அவர் 'பண்டிட் ராணி' என்று அழைக்கப்பெற்றார்.
தேசிய ஊடகங்களால் பூஜிக்கப்பட்ட பூலான்தேவியை இரண்டு வருடங்களாகியும் காவல்துறையால் பிடிக்க முடியவில்லை. பின்னர் உடல்நலக்குறைவால் தானே சரணடைந்து சிறைக்குச் செல்வதாக பூலான் அறிவித்தார்.
மேலும் காந்தி மற்றும் கடவுளான துர்கா தேவி, இவர்களின் முன்தான் தனது கைது நிகழ வேண்டும், தனக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது, எட்டு வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கக் கூடாது, இறுதியாக தன் குடும்பம் தன் கைதைப் பார்க்க வர வேண்டும்... என தான் விதித்த பல நிபந்தனைகளுக்குச் சம்மதம் பெற்றவுடன்தான் சரணடைய ஒப்புக்கொண்டார்.
அவர் கேட்டபடியே சம்பல் நதிக்கரையில் மகாத்மா காந்தி மற்றும் துர்காவின் சாட்சியாக 10,000 மக்கள் பங்குபெற 300 காவல்துறை அதிகாரிகளுடன் நடந்தது பூலானின் கைது. 48 குற்றங்களுக்காகப் பதியப்பட்ட பூலான் தனது சிறைத் தண்டனையின் 11 ஆண்டுகள் முடிந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த சில நாள்களில் முலாயம் சிங் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரின் அமைச்சரவை அதிரடி முடிவாக பூலானின் மேலிருக்கும் அனைத்து குற்றங்களிலிருந்தும் அவரை விடுவித்தது. பூலான் தேவிக்கு மட்டுமின்றி மக்கள் அனைவருக்கும் இது ஒரு அதிர்ச்சி செய்தியாக இருந்தது.
தன் வாழ்வை அரசியல் பக்கம் நகர்த்த முயன்ற பூலான், உம்மத்து சிங் என்ற காங்கிரஸ் உறுப்பினரை மணந்து கொண்டார். ஆனால் இவரையே பூலானின் மரணத்திற்காகச் சந்தேகம் கொள்வதாக அறிவித்திருந்தார் பூலானின் சகோதரி.
பதினோராவது மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்ட பூலான், தேர்தலில் வென்று மக்களுக்கு தன் சேவையைச் செய்ய ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டார்.
மக்களவை உறுப்பினராகப் பெண்ணுரிமை, குழந்தை திருமணத்திற்குத் தீர்வு, ஏழைகளுக்கான உரிமை முதலிய விஷயங்களுக்காகப் பெரிதும் குரல் கொடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் ஏழை சமூகத்திற்காகவும் தொடர்ந்து தன் போராட்டங்களை நடத்தி வந்த பூலான் ஒரு தனிச்சிறப்புடைய தலைவராகப் பார்க்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு ஒரு நாள் கூட்டம் முடிந்து வெளியேறிய பூலான் தனது மார்பில் குண்டு பதக்கங்களை ஏந்தி மரணிக்கும்படி ஆனது. எதிர்க்கட்சியினரால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்று பூலானின் கொலை வழக்கு முடிவுபெற்றது.