கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (17.12) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, உட்கட்டமைப்பு சேதங்களுக்குச் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள், நிவாரண உதவிகள், உலர் உணவு விநியோகம், வீடு சுத்தப்படுத்தல் கொடுப்பனவு, சேதமடைத்த வீடுகளிற்கான கொடுப்பனவு, அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியாரின் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும் நெற்பயிர், மேட்டுநில பயிர்ச்செய்கை மரக்கறி மற்றும் பழவகைகளின் பயிர் அழிவு, கால்நடை, மீன்பிடி, தொழில் முயற்சி முதலான வாழ்வாதார சேத விபரங்கள் மற்றும் நீர்ப்பாசனம், விவசாயம், வீதி, மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டுமான் சேத விபரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட வெள்ள அபாய பிரதேசங்கள் தொடர்பில் விளக்கமளித்த மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் அங்கு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அத்துடன் வெள்ள அனர்த்த காலத்தில் உதவியவர்களின் பணி விபரங்கள் காட்சிப்படுத்தி அவர்களது பணிகளை பாராட்டியதுடன், இடர் காலத்தில் உதவிய அனைவருக்கும் மாவட்டம் சார்ந்து தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருந்தி திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாவட்ட அபிவிருத்தி திட்டம், மீள்குடியேற்றம், பிரமந்தனாறு காலநிலைக்கு அமைவான சமூக விவசாயப் பண்ணை, நலன்புரி நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
