கடுமையாக போராட்ட நடவடிக்கைகளை கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவு

kaniat month's ago

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக போராட்ட நடவடிக்கைகளை கையாள அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார்.

ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெவ்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் அனைவரின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது.

இதனால் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் நிர்பந்தத்தில் உள்ளது ஈரான் அரசாங்கம் உள்ளது. 

போராட்டம் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது பொலிஸார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன், ஈரானில் வன்முறையில் ஈடுபட்டதாக 60 பெண்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை, சர்வதேச ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் நேர்காணல் செய்வதாக இருந்தது.

இதற்காக பல வாரங்களாக திட்டமிடப்பட்டு புதன்கிழமை இரவு நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் நேர்காணல் இது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது நேர்காணலை, இரத்து செய்துவிட்டதாகவும், நேர்காணல் காணும் கிறிஸ்டியன் அமன்பூர், ஹிஜாப் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிறிஸ்டியன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நியூயார்க்கில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டமோ வழக்கமோ இல்லை என்றும், இதற்கு முன்பு இருந்த எந்த ஈரானிய அதிபரும் ஈரானுக்கு வெளியே தான் அவர்களை நேர்காணல் எடுத்தபோதும் ஹிஜாப் அணிய வற்புறுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஈரானில் எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும் என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.

இதன் காரணமாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்த நாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.