நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட வேண்டாம் - டயானா கமகே

kaniat month ago

முக்கிய அரச நிறுவனங்கள் நாளாந்தம் மில்லியன் கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதால் நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சுமார் 20 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு 286 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நாளாந்தம் இதன் மதிப்பு 790 மில்லியன் ரூபாய் ஆகும்.

இலங்கையில் சுமார் 527 அரச அமைப்புக்கள் உள்ளதாகவும், அவற்றில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்து சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குறிப்பிட்டார்.

இவ்வாறான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் 0.25 வீதமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். அத்தகைய நிதிகளை நிலையான வைப்புத்தொகையில் வைப்பு செய்தால், மதிப்பில் சுமார் 20 சதவீதத்தை அரசாங்கம் பெற்றிருக்க முடியும் என்றார்.

எனவே நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார்.