'நெற்றியில் திலகமிடுதல்' எனும் பாரம்பரியம் வந்த காரணம்.

#Lifestyle #Tamil People #history
Kesariat month ago

நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் இடுவதை 'திலகமிடல்' என்று சொல்வார்கள். இது பழந்தமிழர் பழக்கங்களில் ஒன்று. பெண்கள் திலகமிடுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். 'திலகமிடுதல்' பிற்காலத்தில் 'பொட்டிடுதல்' என்று அழைக்கப்பட்டது.

தமிழர்கள் பொதுவாக வாழும் இடம் வெப்ப பூமி என்பதால் பொதிகை மலையில் விளைந்த சந்தனத்தை ஆணும், பெண்ணும் உடலில் பூசிக்கொண்டதாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் செய்திகள் உள்ளன. சந்தனம் வாசனைத் திரவியமாகவும் பயன்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மஞ்சள், ஜவ்வாது, படிகாரம், சுண்ணாம்பு, தாழம்பூ சாறு ஆகியவற்றைக் கொண்டு குங்குமம் தயாரிக்கப்படுகிறது.

மஞ்சளும், குங்குமமும் மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. குங்குமம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் செழுமையின் குறியீடாக அமைகிறது. மஞ்சள் சேர்த்து உருவாக்கப்படுவதால், குங்குமம் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொள்வதன் மூலம் தலையில் படிந்திருக்கும் தேவையற்ற நீர் உறிஞ்சப்படுகிறது. திருநீற்றை 'காப்பு' என்றும் சொல்லுவார்கள். அருகம்புல்லை உண்ணும் பசுவின் சாணத்துடன், நெல் உமியைக் கலந்து எரிப்பதால் கிடைக்கும் சாம்பலில் இருந்து 'திருநீறு' தயாரிக்கப்படுகிறது.

திலகம் இடுவதால், இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் 'ஆக்ஞா' சக்கரத்தின் இயக்கம் தூண்டப்பட்டு, சிந்தை ஒருமைப்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்வதால் 'பிட்யூட்டரி' என்ற நாளமில்லா சுரப்பி குளிர்ச்சி அடையும். அதன் மூலம் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் 'ஹிப்போ கேம்ப்ஸ்' என்ற பகுதியில் ஞாபத்திற்கான தூண்டுதல்கள் சிறப்பாக நடைபெறும்.

இவ்வாறாக யோக அறிவியல் முறைகளில் 'நெற்றியில் திலகமிடுதல்' முக்கியமானதாகக் கூறப்படுகின்றது. குங்குமம் பெண்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் அணிகலனாகவும் விளங்குகிறது. சந்தனம், குங்குமம், விபூதி மூன்றும் இல்லாமல் தமிழர்களின் சடங்குகள் சிறப்புப் பெறுவதில்லை.