வடக்கின் மண்வாசனை வீசும் இன்றைய சிறுகதை................. ”பச்சைப் புட்டு”

#சிறுகதை #இன்று #யாழ்ப்பாணம் #இலங்கை #லங்கா4 #short story #today #Jaffna #Sri Lanka #Lanka4
Kesariat day's ago

பச்சைப் புட்டு

"வணக்கம் வரதன்.எப்ப வாறிங்கள்?"
தன் அலைபேசியில் அழைத்து வரதனை கேட்டாள் சுபா.

" இரவைக்குத் தான் வருவன்.பன்னிரண்டு மணி தாண்டி ஒரு மணியாகும்.ஏன் கேட்கிறிங்கள்."
மனைவியாக இருந்தாலும் மரியாதைக் குறைவாக பேசுவதில்லை வரதன்.அப்படி பேசுவதற்கு சுபாவமும் விடுவதில்லை.
ஆனாலும் வரதனை சுபா செல்லமாக அழைப்பதாக அதிகம்  "டா" போட்டுத்தான் அழைப்பாள்.

" என்னடா,  காலையிலும் சாப்பிடாமல் போனீங்கள்.கடையில வேற சாப்பிடவும் மாட்டிங்கள்........சரி சரி வாங்கோ.நான் சாப்பாடு செய்து வைக்கிறன்." என்றவள் தன் அலைபேசியில் தொடர்பை துண்டித்துக் கொண்டு தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பதைத் தொடர்ந்தாள்.

நேரம் இரவு பத்துமணியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

வரதன் வழமையான தன் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
அதிகாலை இரண்டு மணிக்கு ஆயத்தமாகி புறப்பட்டுச் செல்லும் வரதனுக்கு இரண்டு மணிக்கே முதல் வகுப்பு தொடங்குவதாக நேர ஒழுங்கு செய்திருப்பார்.

யாராவது " என்னடா.... இரண்டு மணி வகுப்புக்கு இரண்டு மணிக்குத்தான்  வீட்ட இருந்து போறாய்?" என்றால் 
பதிலுக்கு " குரு பிந்திப் போனால் குற்றமில்லை" என்று சிரித்தவாறே சென்று விடுவார்.

ஆனாலும் ஒரு மணிநேரத்தில் கற்றுக்கொடுத்து விட வேண்டிய பாடப்பரப்பை முடித்திடும் திறமையான ஆசிரியராக இருந்தார்.பத்து நிமிடம் பிந்திப் போனாலும் பத்து நிமிடம் முந்தி வகுப்பை முடிக்கும் பழக்கமுள்ளவர்.அவரிடம் படிக்கும் மாணவர்களும் இந்த இயல்புக்கு பழக்கமாகிப் போய் விட்டார்கள்.

உழைப்புக்கான பணத்தைப் பெறுவதற்கு மட்டுமே நேர அளவை ஒரு அளவுகோலாக பயன்படுத்தும் வரதன் கற்பிப்பதில் நேர்மையாக செயற்படுபவர்.திறமையான மாணவர்கள் வீணாக போய்விடக் கூடாது என்று நித்தம் பேசிக்கொண்டு இருப்பார்.ஆனாலும் அவரது முயற்சிக்கு பொருத்தமான மாணவர்கள் கிடைப்பது மிகவும் கடினமானதாவே இருக்கிறது.

கடைகளில் சாப்பிட விரும்பாத வரதன் வகுப்பு நடக்கும் வீடுகளிலும் சாப்பிடுவதில்லை.கொஞ்சமாக சாப்பிடும் வரதனுக்கு கடைகளில் அதிகமாக உணவு வாங்குவாதால் வீணாக மீதி வைப்பதாக சொல்வார். வளர்ந்த மனிதருக்கு ஒரு நேர உணவு வரதனுக்கு  மூன்று வேளையும் போதுமானதாக இருக்கும்.இப்படி இருக்க கடைகளில் உணவு உண்பது தனக்கு வீண் செலவு என்பார்.ஒரு வகையில் அதுவும் சரிதான்.
இதனால் அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் வரதனுக்கு நள்ளிரவு தாண்டி  வீடு வந்து தான் சாப்பாடு.அன்றைக்குப் பார்த்து இரவு சாப்பாடு இல்லாமல் போனாலோ அல்லது சரியில்லாமல் போனாலோ மீண்டும் அடுத்த நாள் இரவு தான் சாப்பாடு.

" இப்படி ஏன் சாப்பிடாமல் ஓடி உழைக்கிறாய்? உனக்கு என்ன பிள்ளையள் இப்பதானே சின்னாக்கள்..அவர்கள் வளர நாள் கிடக்கு.ஆறுதலா சாப்பாட்டை பார்த்து சாப்பிட்டு உழைக்கலாம் தானே!"   என்று யாராவது சொன்னால் அதற்கும் வேடிக்கையாக பதில் சொல்லிச் செல்வார்.

" சாப்பாட்டை பார்த்துக்கொண்டு வேலை நிக்காது.அதாலசாப்பாட்டை பார்த்துக்கொண்டு நானும் நிக்கேலாது தானே!"

வரதன் முதல் நாளும் ஒரு நேரச் சாப்பாட்டோடு தான் வேலைக்குப் போனவன்.பசி கொஞ்சம் கடுமையாகத் தான் இருக்கும்.சுபா வேற சாப்படு செய்து வைக்கிறது என்று சொல்லி இருக்கிறாள்.

அது வரை பசியின் ஆதிக்கத்தை மனதால் கட்டுக்குள் வைத்திருந்த வரதன் இப்போது மெல்ல மெல்ல பசியின் ஆளுகைக்கு ஆளாகிக் கொண்டார்.

பரபரப்பானார்.சுறுசுறுப்பானார்.நேரம் கடந்து போனதை கண்காணிக்கும் ஆற்றல் இழந்து பசியின் பிடியில் உணவின் இரசணையில் திளைத்துக் கொண்டவாறே ஒரு மணிவரை வகுப்புக்களை முடித்து விட்டு வீடு நோக்கி புறப்பட்டார்.

நள்ளிரவு நேரம்.நடுநிசிக்காலம்.மாரிமழைக்காலம்.கும்மிருட்டு மூடியிருந்த மழைக்காலம் அது.இருந்தாலும் மழை அப்போது விட்டிருந்தது.பாதை மழையில் நனைந்திருந்தது.காற்றில் நிரம்பிய ஈரப்பதன் வேகமாக பயணிப்பதை தடுத்துக் கொண்டிருந்தது.மெதுவாகத் தான் தனது வாகனத்தைப் செலுத்திக் கொண்டிருந்தார்.

யானைகள் கடக்கும் பாதை அது.வயல்வெளிகளை வீதியின் ஒரு பக்கத்தில் கொண்டிருந்த அந்த பாதையின் மறு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட பெரும் காடு.
இடையிடையே இப்படியே இடம் சூழல் மாறிப்போனாலும் பாதையின் அரைப்பகுதிக்கு பெருங்காடு இருபுறமும் அடர்ந்திருக்கும்.
வரதனின் வாகனம் தன் முன்னொளியில் யானைக் கூட்டம் ஒன்றை வீதியில் நிற்பதாக காட்டிக்கொண்டது.

அதனைக் கண்டு விட்ட வரதனும் பாதையில் யானைகளின் செயற்பாடுகளை உற்று நோக்கி கூட்டத்திலுள்ள யானைகளை முன்னொளியில் நன்கு கண்ணுற்றார்.
அவை மேச்சலுக்காக பாதை நெடுகிலும் நடந்து செல்கின்றன.வீதியோர மரங்களையும் புற்களையும் உணவாக்கியபடி.இந்த கூட்டம் பாதையை கடக்கும் நிலையில் இல்லை.இதனால் காத்திருக்க முடியாது.யானைகளினூடே பயனப்பட்டு அவற்றை விலக்கி செல்ல முயன்றார்.அவையும் 
தம்பாட்டில் விலகி மேச்சலில் மூச்சாக இருந்தன.

மதம் பிடித்த தனியானை தான் ஆபத்தானது.தனியனாக வரும் யானைகளைக்கண்டு பயம் கொண்டு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்.
இதுக்குள்ள வேற தென்னிலங்கையில் இருந்து மதவளர்ப்பு யானைகளையும் கொண்டு வந்து இறக்கி விட்டிருந்தார்கள்.அவையும் வீதிமறியலை செய்து பயணங்களை தடுத்து சிரமம் செய்யும்.
 
இன்று வீடு சென்றால் தான் வரதன் மீண்டும் அதிகாலை இரண்டு மணிக்கு, அடுத்த நாள் வேலைகளைத் தொடங்குவதற்கு வசதியாக இருக்கும். என்ற உள்ளுணர்வோடு தனக்கு நேரக்கூடிய ஆபத்துக்களையும் ஒரு கனம் மறந்து பயணத்தின் தடைகளை கடக்க முயன்று கொண்டிருந்தார்.
மன உறுதி கொண்டு சவாலை  எதிர்கொண்டு இலக்கை அடைவதில் வல்லவர் என்பதை இந்த பயணத்திலும் செய்து காட்டி விட்டார்.

யானைகளுக்கும் இடையூறில்லாது அவற்றால் தனக்கும் இடையூறில்லாது காட்டுப் பாதையை கடந்து நகரத்துக்கு வந்து விட்டார்.
வரதனின் பயணப்பாதையின் நீளம்; ஒரு நாளில் நிகழும் முழுப்பயணத்திற்கும் மூன்றிலக்கத்தின் முன்பாதி தொடும்.நெடுந்தூரத்தை சிறு தூரம் போல கடந்து காரியம் ஆற்றும் கைங்கரியம் கொண்டவர்.

நேரமோ ஒரு மணியைத் தொடுவதற்கு சில நிமிடங்கள் இருந்த போது வீட்டுக்கு முன் தன் வாகனத்தைத் கொண்டுவந்து நிறுத்தி அதனை சீர் செய்து நாளைய பயணத்துக்கு ஆயத்தமாக்கி விட்டு, கால்முகம் கழுவிக் கொண்டு இருந்தார்.

சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட சுபாவமும் உணவை இட்டு ஆயத்படுத்தி கொண்டு வர வரதனும் தன் முகத்தை துடைத்துக் கொண்டு வந்து உண்ண அமர்ந்தார்.

உணவை கண்டதும் அதன் வாசனையில் பசி புத்துயிப்படைந்தது.
உப்பில்லாத உணவைக் கூட பசியில் கொடுத்தால், உப்பிடாததை மறந்து உணவை உண்டு ஏப்பமிடும் சாதாரண மனிதனின் மனநிலையில் இப்போது வரதனின் மனமும் இருந்திருக்க வேண்டும்.

இறக்கும் போதும் தன் சுயநினைவை இழந்து போகக்கூடாது என்று நிதானம் கொள்ளும் வரதன் அமைதியாகவே உணவை உண்ண ஆரம்பித்தார்.

கோதுமை மா புட்டும் பருப்புகள் கறியும்.கறி கொஞ்சம் தண்ணித் தன்மையாக புட்டுக்கு ஏற்றால் போல.புட்டின் நிறமும் மணமும் அதன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கவே வரதனும் புட்டைக் குழைத்து வாயில் போட்டுக் கொண்டார்.

ஆனாலும் இயல்பில் கொஞ்சம் வேறுபட்டிருந்ததையும் உணர்ந்தார்.
ஐயோ பாவம்.புட்டு பச்சை. ஒன்றுமே பேசவில்லை.பேசவும் முடியாது.இது பற்றி கதைக்கும் படியும் சுபா இல்லை.

" நான் நினைச்சேன்.நீங்கள் வேளைக்கு வருவிங்கள் எண்டு.எண்டா இவ்வளவு நேரமானது.நான் சாப்பாட்டை செய்து வைச்சிற்று முழிச்சிருந்தனான்.இருந்தாப்போல நித்திரையாகிப் போயிற்றன்."

"எப்பிடிடா புட்டும் கறியும் நல்லாயிருக்காடா?"
"ம்ம்...என்றபடியே தலையை ஆட்டினான் வரதன்.
     

                                                                                                         ............... அன்புடன் நதுநசி