வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியின் ஒலிம்பிக் பயணம் - சாதனைப் பெண்ணின் கதை இது
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்ததோடு, முதல் சுற்றில் வெற்றிபெற்றும் அசத்தினார்.
இன்று மிகுந்த நம்பிக்கையோடு தொடங்கியது வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியின் ஒலிம்பிக் பயணம். அதிகாலையில் நடைபெற்ற டேபிள் ஆஃப் 64 போட்டியில் துனிசியாவின் நாதியா பென் அஸிஸியுடன் மோதினார் பவானி தேவி. 27 வயதான பவானி தேவியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. துனிசியா வீராங்கனையை மிகவும் எளிதாக எதிர்கொண்டு 15-3 என்கிற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று டேபிள் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதிபெற்று சாதனைப்படைத்தார் பவானி. இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் கலந்துகொள்வதும், அதில் வெற்றிபெற்றதும் வரலாற்றில் இதுவே முதல்முறை.
ஆனால், இரண்டாவது சுற்றில் பவானி தேவிக்கு உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான பிரான்சின் மேனோன் புரூனட்டை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. எனினும் நம்பிக்கையோடு போட்டியைத் தொடங்கினார் பவானி தேவி.
ஆரம்பத்தில் இருந்தே புரூனட் அதிரடி ஆட்டம் ஆடினார். இதனால் பவானி தேவி தொடர்ந்து பின்வாங்கவேண்டிய சூழல் உருவானது. முதல் பாதியை 8-2 என கைப்பற்றினார் மேனோன் புரூனட். ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மீண்டு வந்தார் பவானி தேவி.
இந்தமுறை புரூனட்டை பின்வாங்க வைத்ததோடு, மிகவும் தந்திரமாக ஆடிப் புள்ளிகளையும் பெற ஆரம்பித்தார். ஆனாலும், இந்த ஆட்டம் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தும் அளவுக்கு இல்லாமல் போக 15-7 என்கிற புள்ளிக்கணக்கில் மேனோன் புரூனட் வெற்றிபெற்றார்.
தோல்வியடைந்தாலும் ஃபென்சிங் விளையாட்டில் இந்தியாவின் பெயரை ஒலிம்பிக் வரை கொண்டுசேர்த்திருக்கும் பவானி தேவியை வாழ்த்துவோம்!