தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வந்த எட்டு தொழிலாளர்கள் தமக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இவ்வாறு நேற்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்த தொழிலாளி ஒருவர் மயக்கம் முற்ற நிலையில் 1990 நோயாளர் காவு வண்டியில் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணி இடைநீக்கம் செய்துள்ள தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிக்கு எதிராகவும் தமக்கு நீதி கோரியும் தோட்ட ஆலய முன்றலில் 08 தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கவரவில தேயிலைத் தோட்டத்தில் தினமும் வெளியிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து தேயிலைக் கொழுந்து பறிக்க அனுமதிக்க வேண்டாம் என கவரவில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தோட்ட நிர்வாகத்துடன் கருத்து மோதலொன்று எற்பட்டுள்ளது.
இதனையடுத்து தங்கள் சேவைகளை தன்னிச்சையாக தோட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களது போராட்டம் குறித்து உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையொன்றையும் முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையெனவும் தொழிலாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
இதேவேளை இவர்களது போராட்டத்திற்கு கொட்டகலை தோட்டத் தொழிலாளர்களும் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்த தொழிலாளி ஒருவர் மயக்கம் முற்ற நிலையில் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்