ஆடிப்பூரமான இன்று என்ன செய்ய வேண்டும்?
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் உச்சம் பெரும் நாளையே ஆடிப்பூரம் என்று வழிபடுகிறோம். இந்த வருடம் 2021 ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஆடி 26 அன்று ஆடிப்பூரம் கொண்டாடப்பட உள்ளது. இதே நாளில் சுவர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அற்புதமான ஆடிப்பூரம் திருநாளில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் பெறமுடியும்
வளமான சுகபோகங்கம் நிறைந்த வாழ்க்கை, ஆரோக்கியமான நீண்ட ஆயுள் போன்றவற்றை தான் அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஒருவரிடம் இவை அனைத்தும் இருந்து அவர்களிடம் ஒரு குழந்தை இல்லாவிடில் அந்த தம்பதியினரின் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. திருமணமான ஒரு வருடம் அல்லது மூன்று வருடத்திற்குள்ளாவது ஒரு குழந்தை பிறந்திட வேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும். இரு வீட்டாரிடமும் நல்ல சுமூகமான உறவு மேம்படும்.
இவ்வாறு குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலுடன் தான் இருப்பார்கள். குழந்தை இல்லாமல் வருத்தத்தில் இருப்பவர்கள் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு பூஜை செய்வதால் ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை வரம் கிடைத்திடும்.
உலகம் பிரளயத்தில் மூழ்கிய போது அந்த பிரளயத்திலிருந்து வெளிவந்த சிவலிங்கத்தை முனிவர்கள் பூஜித்த பொழுது அதிலிருந்து பொன் போன்ற பிரகாசத்துடன் தோன்றியவள் அம்பிகை. இந்த நாளையே ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் முனிவர்களும், தேவர்களும் அம்பிகையை வேண்டி தவமிருந்து அவர்களுக்கான வரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
அதே போல் 15 நாட்கள் அம்பிகையைத் தொழுது கௌரி விரதம் மேற்கொண்டால் கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் பலப்பட்டு, நீண்ட ஆயுள் பெற்று பல ஆண்டுகள் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இவ்வாறான சிறப்புமிக்க இரண்டு நாட்களும் ஒரே தினத்தில் வரும் இந்த ஆடிப்பூரம் நாளன்று அம்பிகையை வழிபட்டு வேண்டிய வரங்களை வாங்கிக் கொள்ள உகந்த தினமாக இருக்கும்.
வளைகாப்பு: ஆடிப்பூரம் நாளில் கோவில்களில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, குங்கும காப்பு, சந்தனகாப்பு நடத்துவார்கள். இந்த நாளில்தான் அம்மனுக்கு வளைகாப்பும் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் வளைகாப்பிற்காக அம்மனுக்கு வளையல்கள் வாங்கி கொடுப்பதன் மூலம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். வீட்டில் எந்த வித பிரச்சனை இருந்தாலும் அவை உங்களை விட்டு விலகி ஓடும். செல்வ செழிப்பான வாழ்க்கை உங்களை வந்தடையும். நீண்ட ஆயுள் கிடைக்கும். அதிலும் மிக முக்கியமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
அன்றைய தினம் வெகு நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டிலேயே முறைப்படி சந்தனம் மற்றும் குங்குமம் நலங்கு வைத்து பெண்ணின் இரு கைகளிலும் வளையல் வளையல் அணிவித்து முறையாக வளைக்காப்பு செய்வதன் மூலம் அடுத்த வருடமே அவர்களின் இல்லத்தில் ஒரு குழந்தை தவழும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு ஐதீகமாகும்..
எனவே அன்றைய தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு வளையல்கள் வாங்கிக் கொடுத்தும், வளையல்களை கோர்த்து வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு மாலையாக சார்த்தி, நெய்வேதியம் படைத்து பூஜை செய்வதும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.