கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு ஆபத்து - ஆய்வில் கண்டுபிடிப்பு
கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள பிரிவினராக கர்ப்பிணிகள் கருதப்படுகின்றனர். அப்படி தொற்றுக்கு ஆளாகும் கர்ப்பிணிகளுக்கு வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இதில் அதிர்ச்சிகரமான முடிவுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்தவகையில் கர்ப்ப காலத்தின் ஒரு கட்டத்தில் தொற்றுக்கு ஆளாகும் கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டிய பிறப்பு அல்லது குறை பிரசவத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அந்தவகையில், கருவுற்றதில் இருந்து 32 வாரங்களுக்குள் பிரசவம் ஏற்படும் ஆபத்து 60 சதவீதம் அதிகமாக இருந்தது. இதைப்போல குறை பிரசவ அல்லது 37 வாரங்களுக்குள் குழந்தை பிறக்கும் ஆபத்து 40 சதவீதம் அதிகமாக இருந்தது,
அதுவும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சினை உள்ள கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவ ஆபத்து 160 சதவீதமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கர்ப்பிணிகளை பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.