ஒரு டோஸ் தடுப்பூசி கொரோனாவுக்கு அதிக பாதுகாப்பை கொடுக்காது: ஆய்வு
கொரோனா அறிகுறி உடையவர்கள் மற்றும் தீவிர பாதிப்பை கொண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அதிக பாதுகாப்பை வழங்காது என்று டெல்லி தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனை பணியாளர்களிடம் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தீவிரமான இரண்டாவது அலையின் சமயத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் தலைவர் மருத்துவர் ரூமா சாத்விக், அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றில் ஒரு டோஸ் தடுப்பூசியை விட இரண்டு டோஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் படி, "கொரோனா பாதித்தவர்களில், ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் அறிகுறி உடையோர் 12 சதவீதமும், தீவிர பாதிப்பு உடையோர் 2 சதவீதமாகவும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர் 0.7 சதவீதமாகவும் உள்ளது. இதில் இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் அறிகுறி உடையோர் 12 சதவீதமும், தீவிர பாதிப்பு உடையோர் 1.2 சதவீதமாகவும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர் 0.4 சதவீதமாகவும் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களில் அறிகுறி உடையோர் 14.2 சதவீதமும், தீவிர பாதிப்பு உடையோர் 3.3 சதவீதமாகவும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர் 1.7 சதவீதமாகவும் உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில் "டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் 4,296 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 2,716 பேர் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 623 பேர் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தியிருந்தனர். 937 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. கோவாக்சின் மற்றும் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 20 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தவில்லை. மார்ச் 1 முதல் 31 ஆம் தேதி வரை இந்த 4276 பணியாளர்களில் 526 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2 % பேர் அறிகுறியுடனும், 82% பேர் குறைவான அறிகுறியுடனும், 10% பேர் மிதமான அறிகுறியுடனும், 5 % பேர் தீவிர பாதிப்புடனும் இருந்தனர், இவர்களில் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், ஒருவர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர். இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.