இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த நாள் 20-8-2021
உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் ராஜிவ் காந்தியும் ஒருவர். தலைமுறைகள் மாற்றத்தை உணர்த்திய தலைவர்களில் ஒருவரான ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்று.
சுதந்திரத்திற்கு முன்னாலும் அதற்கு பிறகும் தலைமுறைகளாக அரசியலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். நம்முடைய இந்திய வரலாற்றில் ராஜிவ் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. தாத்தா,அம்மாவைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக பதவியேற்று குண்டு வெடிப்பில் இறந்தும் போனார். அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது இறுதிசடங்கு முடிந்த உடனேயே மக்களவை தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அந்த தேர்தலில் 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. ராஜிவ் காந்தி தன்னுடைய 40வது வயதில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ராஜிவ் காந்தி பிறந்தார். அவருக்கு மூன்று வயதாகும் போது இந்தியா சுதந்திரம் பெற்று தாத்தா நேரு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பா பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜிவ் காந்தி தன்னுடைய குழந்தை பருவத்தை தாத்தா நேருவுடன் தீன் இல்லத்தில் கழித்தார். அப்போது ராஜிவின் தாய் இந்திரா காந்தி பிரதமரின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். டேராடூனில் உள்ள வெல்ஹாம் பள்ளியில் கல்வி பின்னர் இமய மலையின் அடிவாரத்தில் உள்ள தங்கும் வசதி கொண்ட டூன் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
பள்ளிப்படிப்பை முடித்ததும் ராஜிவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். பிறகு லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். அவரது புத்தக அலமாரி முழுவதும் அறிவியல் தொடர்பான புத்தகங்கள் தான் இருக்கும். தேர்விற்காக மனப்பாடம் செய்வது ராஜிவுக்கு சுத்தமாக பிடிக்காது.
ராஜிவுக்கு இசையில் நாட்டம் உண்டு. மேற்கத்திய இசை, இந்துஸ்தானி, நவீன இசை பிடிக்கும். இதைத்தவிர புகைப்படம் எடுப்பது, அமெச்சூர் ரேடியோவிலும் அவருக்கு நாட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் பிடித்தமானது விமான ஓட்டுவது பிடிக்கும். தில்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வணிக விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றார். அதன் பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டுநராக சேர்ந்தார்.
கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருந்தபோது உடன் படித்த சோனியா மைனோ என்ற பெண்ணை காதலித்து 1968 ஆம் ஆண்டு டில்லியில் திருமணம் செய்து கொண்டார். தில்லியில் இருந்தாலும் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார் ராஜிவ்.
1980 ஆம் ஆண்டு ராஜிவின் சகோதரர் சஞ்சை விமான விபத்தில் உயிரிழந்த போது தான் ராஜிவின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்தது.அரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. உத்திரபிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் மரணத்திற்கு பிறகு அதே தொகுதியில் நடைப்பெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வென்றார் ராஜிவ்
அக்டோபர் 31 1984 அன்று இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தனது சொந்த வாழ்க்கையில் உள்ள சிரமங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக பல செயல்களை தெளிவாகவும் துல்லியமாகவும் செயல்படுத்தினார்.
1991 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்துக் கொண்டனர். அந்த தேர்தலின் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்பதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்க வந்தார் ராஜிவ் காந்தி. அங்கே நடந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி உயிரிழந்தார். ஸ்ரீ பெரும்பதூர் வருவதற்கு முன்னதாக மத்திய உளவுத்துறை ராஜிவ் காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வரை பல மர்மங்களை சுமந்திருக்கும் ராஜிவ் காந்தி கொலைவழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது பெருஞ்சோகம்.