டுவீட்டரின் புதிய வடிவமைப்பு எப்படியானது?
ட்விட்டரின் புதிய வடிவமைப்பால் தலைவலி ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் குறைகூறியதால், அந்நிறுவனம் வடிவத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய வடிவமைப்பில், அதிக வேறுபாடு கொண்ட வண்ணங்களும் புதிய எழுத்துருவும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
முதலில் பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும், பயனீட்டாளர் அனுபவத்தை அது மேம்படுத்தும் என்று ட்விட்டர் கூறியிருந்தது.
ஆனால், அது படிப்பதற்குக் கடினமாகவும் குழப்பமாகவும் இருப்பதோடு, மிகவும் வெளிச்சமாக இருப்பதாகவும் பலர் குறைகூறினர்.
அதை அடுத்து, வடிவமைப்பில் ட்விட்டர் மாற்றங்கள் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புதிய எழுத்துரு அறிவிக்கப்பட்டது. அது ட்விட்டர் நிறுவனத்திற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், பழைய எழுத்துக்கு மாற்றும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் மாற்றங்களுக்குப் பயனீட்டாளர்களிடமிருந்து எதிர்ப்பு வருவது இது முதல்முறை அல்ல. 2014, 2017 ஆண்டுகளிலும், ட்விட்டரின் வடிவமைப்பு மாற்றங்கள் குறித்துக் குறைகூறல்கள் எழுந்தன.