இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
“கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று வெளியிட நான் விரும்புகிறேன்.
இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.
திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞருடைய ஆட்சியிலே, கடந்த 1997-1998-ம் ஆண்டில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 ஆயிரத்து 594 புதிய வீடுகள், தலா 5 ஆயிரத்து 750 ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டன.
மேலும், இதர உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கு 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
1998-1999 -ம் ஆண்டில், தலா 7 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பீட்டில், 3 ஆயிரத்து 826 வீடுகள், 2 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன. கடந்த 2-11-2009 அன்று “இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அடிப்படைத் தேவைகள்” குறித்த ஒரு ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதனடிப்படையில், அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த என்னையும், அமைச்சர்களையும் இலங்கை அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி ஆய்வு நடத்தி, அறிக்கை தர உத்தரவிட்டார்.
அப்படி ஆய்வு செய்துவிட்டு, திரும்பி வந்து நாங்கள் அப்போது கொடுத்த அறிக்கையினை ஏற்று, இலங்கை அகதிகள் முகாம் வீடுகள் பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, புதிய கைப்பம்புகள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் இருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான 14 அடிப்படைப் பணிகளை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செய்து கொடுத்த முதலமைச்சர்தான் கலைஞர் அவர்கள் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
1983-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவுசெய்து, வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு, இனி பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதிசெய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இதற்காக, அவர்கள் தங்கி யிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்துதர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்.
அதுமட்டுமின்றி, முது நிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பாலிடெக்னிக் படிப்பிற்கு 2,500 ரூபாய், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 3,000 ரூபாய், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. இனி, இதை உயர்த்தி, பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதற்காக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்கள் தங்களது வேலைவாய்ப்புத் தகுதியினை உயர்த்திக் கொள்ளவும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஐந்தாயிரம் முகாம் வாழ் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சிறு குறு தொழில்கள் செய்திட ஏதுவாகவும், முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதற்காக நடப்பு நிதி ஆண்டில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஆண்டொன்றுக்குக் கூடுதலாக 21 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவாகும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மண்எண்ணெய் ஒதுக்கீடு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் இவர்களுக்கு எரிவாயு இணைப்புப் பெற இயலாத நிலை உள்ளது.
எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத் தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதற்கான செலவுத் தொகையான 19 லட்சம் ரூபாயையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோஆப் டெக்ஸ் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790 ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதற்காக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள 250 ரூபாய் மதிப்பில் 8 வகையான சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க இயலாத நிலையில், 1,296 ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும்.
இதைத்தவிர, முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக்குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
மேலும், தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட இந்த அரசு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாய், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 லட்சம் ரூபாய், மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல; கடல் கடந்து வாழக்கூடிய தமிழர்களையும் காக்கக்கூடிய அரசுதான் இந்த அரசு என்பதைக் கூறி அமர்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.