கோபியர்கள் எத்தனை வகை?
கிருஷ்ணாவதாரம் என்றால் உடனே மனதில் நிழலாடுவது கோபியர்கள்தான். கோகுலத்தில் பிறந்த கோபியர்கள் பற்பல நிலைகளில் பற்பல அவதாரங்களில் கண்ணனோடு கூடி களிக்க மா
பெரும் தவம் செய்தவர்கள். இந்த கோபியர்கள் சுருதி கோபிகைகள், ரிஷி கோபிகைகள், மைதில கோபிகைகள், கௌசல கோபிகைகள், அயோத்தியா கோபிகைகள், கந்தர்வ கோபிகைகள் என பலவகைப்படுவார்கள். அவர்களின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் வாருங்கள்.
சுருதி கோபிகைகள்
முன்னொரு காலத்தில் ஸ்வேதத் தீவில் உலகையே தனது உருவாக கொண்ட இறைவனை நோக்கி நான்கு வேதங்களும் (சுருதி என்றும் வேதங்களை சொல்லுவார்கள்) தவம் செய்தது. அவர்களின் தவத்தை, கண்டு மெச்சி காட்சி தந்த இறைவனின் திருவுருவ சௌந்தர்யத்தில் (அழகில்) மயங்கியது வேதங்கள். அந்த தெய்வீக அழகை தெவிட்டத் தெவிட்ட, பருக வேண்டும் என்று ஆசை பட்டு, அதையே அந்த திருமாலிடம் வரமாக வேதங்கள் கேட்டது. இறைவனின் இந்த வரத்தை மெய் ஆக்கும் பொருட்டு பிருந்தாவனத்தில் கோபிகைகளாக வேதங்கள் பிறந்தன. அவற்றிற்கு சுருதி கோபிகைகள் என்று பெயர்.
ரிஷி கோபிகைகள்
திரேதா யுகத்தில், திருமால் ராமாவதாரம் எடுத்து வனவாசம் செய்யும் வேளையில், கானகத்தில் வாழும், ரிஷிகள் ராமனின் அளப்பரிய எழிலுருவை கண்டு மோகித்தார்கள். தாங்கள் அந்த பரம்
பொருளுக்கு தேவியராகி சேவை செய்யும் பாக்கியத்தை ராமனிடம் வேண்டினார்கள். ராமன் அவர்களது ஆசை கிருஷ்ணாவதாரத்தில் நிறைவேறும் என்று வாக்களித்தார். அந்த திருவாக்கின் படி வங்க தேசத்தில் மங்களன் என்ற இடையனுக்கு பெண்களாக ராமாயணத்து முனிவர்கள், பிறந்தார்கள்.
இந்த பெண்கள் பிறந்தவுடன் விதி வசத்தால் மங்களனுடைய செல்வங்கள் குறையவே, தனது பெண்களை ஜயன் என்ற அந்நாட்டின் அரசன் மூலம் நந்த கோபரிடம் அனுப்பிவிட்டான். அந்த கோபிகைகளுக்கு விட்ட குறை தொட்ட குறை காரணமாக பூர்வ ஜென்ம நினைவு வந்தது. ஆகவே கண்ணனை அடையும் ஆசையோடு, கண்ணன் மேய்க்கும் மாடுகளின் சானத்தில் எம்பெருமானின் திருவுருவம் செய்தார்கள். அந்தத் திருவுருவை யமுனை ஆற்றின் கரையில் அமர்ந்து, கண்ணனை அடையும் பொருட்டு பூஜித்துவந்தார்கள். அவர்களது பூஜா பலனாலும், பூர்வ புண்ணிய பலத்தாலும் அவர்கள் நினைத்தது ஈடேரியது என்று சொல்லவும் வேண்டுமா?
மைதில கோபிகைகள்
ராவணனாலும் உயர்த்த முடியாத சிவ தனுசை அனாயாசமாக உயர்த்தி வளைத்த போது, ராமனின் புஜ பலம் தாங்காமல் அது உடைந்து போனது இல்லையா? இப்படி தேவர்களும் வியக்கும் படி வீர பராக்கிரமம் காட்டிய தீரனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள். ராமனின் எழில் உருவையும் பராக்கிரமத்தையும் கண்ட மிதிலை வாழ் காரிகைகள், ராமனை கணவனாக அடைய வேண்டி தவம் செய்தார்கள்.
அவர்கள் செய்த தவப் பயனாக கோகுலத்தில் நவ நந்தர்கள் எனப்படும் ஒன்பதின்மர் வீட்டில் பிறந்து, மார்கழி மாதத்தில், யமுனா நதியின் கரையில் நோன்பு இருந்தார்கள். காத்யாயணி அம்பிகையை வேண்டி நோன்பு இருந்ததன் பலனாக, கண்ணன் இவர்களது ஆடைகளை கவர்ந்து லீலை புரிந்ததாக பாகவத புராணம் சொல்கிறது. கோதை நாச்சியார் இந்த கோபிகைகளை முன்னோடியாகக் கொண்டே மார்கழி மாதத்தில் நோன்பு இருந்து, இறைவனை அடைந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌசல கோபிகைகள்
ராமனது தயாரான கௌசல்யா தேவி பிறந்த கோசல தேசத்து நங்கைகள் தான் இந்த கோபிகைகள். மற்றவரை போலவே இவர்களும் இராமனின் அழகிய வடிவில் உள்ளத்தை பரி கொடுத்து, தவம் புரிந்து பெரும் பேறு பெற்றவர்கள்.
அயோத்தியா கோபிகைகள்
சீதையை கரம் பிடித்த கல்யாண ராமனாக திருமால் அயோத்திக்குள் நுழையும் வேளையில் அவனிடம் மனதை பறிகொடுத்தார்கள், அயோத்தி வாசிகளான இவர்கள். அப்பொழுது ‘‘உங்கள் இச்சை துவாபர யுகத்தில் நிறைவேறும்” என்ற அசிரிரி வாக்கை கேட்டு தவத்திலேயே காலத்தை கழித்தார்கள். துவாபர யுகத்தில், விமலன் என்ற அரசனின் மகள்களாக சிந்து தேசத்து ராஜ குமாரிகளாக பிறந்து கண்ணனை அடைந்தார்கள்.
கந்தர்வ கோபிகைகள்
ஈசனைப் போல திருமாலின் மோகினி அவதாரத்தில் மோகித்தவர்கள் இவர்கள். பாற்கடலை கடைந்த கந்தவர்களும் ரிஷிகளும் ஆகிய இவர்கள் துவாபர யுகத்தில் கண்ணனை அடைந்தார்கள். இவர்கள் ஒரு சமயம் இறைவனின் சாபத்திற்கு ஆளாகி, அனந்த சயன விரதம் இருந்து சாப மோசனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
லதா கோபிகைகள்
இறைவன் தன்வந்திரியாக அவதாரம் எடுத்து உலகிற்கு ஆயுர்வேத சாஸ்திரம் தந்தார் இல்லையா? அப்பொழுது அவருக்கு பெரும் சேவை செய்தன மூலிகைகள். இறைவன் அவதார நோக்கம் பூர்த்தியாகி வைகுண்டம் செல்லும்போது, இனி அந்த பரம்பொருளுக்கு சேவை செய்ய முடியாது என்று மூலிகைகள் வருந்தியது. அந்த மூலிகைகளின் கவலையை கண்டு
மனமிறங்கிய திருமால் அவர்களை துவாபர யுகத்தில் பிருந்தாவனத்தில் செடி கொடிகளாக பிறந்து தனக்கு சேவைகள் புரியலாம் என்று வரமளித்தார். அந்த வகையில் பிருந்தாவனத்து செடி கொடிகளும் பெரும் பேறு பெற்றன.
கோபிகைகள் பலப்பல
இறைவன் மச்சாவதாரம் எடுத்த போது, அவனிடம் பக்தி கொண்ட, கடல் வாழ் மச்ச கன்னிகைளும், நாக கன்னிகைளும் துவாபர யுகத்தில் கோபிகைகளாக பிறந்து முக்தி பெற்றதாக புராணங்கள் சொல்கிறது.
இதே போல திருமால் பிருது சக்ரவர்த்தியாகப் பிறந்து, பசுவாக மாறிய பூமியில் இருந்து செல்வங்களை கறந்த சாகசத்தை கண்டார்கள் பர்ஹிஷ்மதி நகர வாசிகள். இவர்கள், அத்திரி மகரிஷியின் உபதேசத்தால் கோபிகைகள் ஆக, இறைவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றார்கள். ராமபிரான் பட்டாபிஷேகத்தின் பிறகு சீதையை துறந்தார் அல்லவா? அவ்வாறு அவர் துறந்த பின் அவர் வேள்வி செய்வதற்காக, பல தங்க சீதா விக்ரகங்கள் செய்யப் பட்டன. ராமனின் பாதம் பட்டு கல்லே பெண்ணாக மாறும் போது, பொன் பெண்ணாக மாறாதா? பெண்ணாக மாறிய அந்த சீதா பிம்பங்களும் ராம பிரான் மீது கொண்ட பக்தியால் கோபிகை ஆகும் பேறு பெற்றது. அவற்றிற்கு யக்ஞ சீதா கோபிகைகள் என்று பெயர்.
ராமர் வன வாசம் செய்யும் போது, அவரது தரிசனம் பெற்ற கானகம் வாழ் வேடுவப் பெண்கள், ராமனை அடையும் பொருட்டு, ராமனின் பாத தூளியை தலையில் தாங்கிய படி உயிர் துறக்க முயற்சித்தார்கள். அப்பொழுது ஒரு இடையன் வேடத்தில் கையில் புல்லாங்குழலோடு (கிருஷ்ணனாக) காட்சி தந்த ராமபிரான் அவர்களது விருப்பம் துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் போது ஈடேறும் என்று ஆசி வழங்கினார்.
இப்படி பல கோடி ஆண்டுகள் தவம் புரிந்து கோபிகைகள் ஆகும் பேற்றை பல முனிவர்கள் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரது வரலாறும் கர்க சம்ஹிதை என்னும் நூலில் விஸ்தாரமாக கொடுக்கப் பட்டு இருக்கிறது. யது குலத்து ஆச்சார்யரான கர்க முனிவர், கிருஷ்ணாவதாரத்தின் போது கண்ணனுக்கு கிருஷ்ணன் என்ற பெயரை சூட்டும் பாக்கியம் பெற்றவர். மேலே கண்ட அனைத்து தகவல்களும் அவர் தவத்தால் கண்டறிந்து, பின் தனது சம்ஹிதையில் கூறியவை. இவை கர்க சம்ஹித்தை, கோலோக காண்டம், ஐந்து மற்றும் ஆறாவது சர்கத்தில் இருக்கிறது.