கோவிட் பெருந்தொற்றால் தற்கொலை தேசமாகும் கேரளா

#Corona Virus
Keerthi
3 years ago
கோவிட் பெருந்தொற்றால் தற்கொலை தேசமாகும் கேரளா

கேரளா என்றாலே நம் எல்லோரது நினைவுக்கும் வருவது அதன் அழகிய கடற்கரைகளும் பச்சை பசேலென்ற இயற்கையின் கொடையும்தான். அதனாலேயே, 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்பட்ட கேரளா தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் தற்கொலை நரகமாக மாறி வருகிறது.
கோவிட் பரவலால் கேரள மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் சிறு குறு தொழில் நிறுவனங்களும், பேக்கரி போன்ற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் வேலையின்மை உயர்ந்துள்ளது. ஊதிய குறைப்பு மற்றும் கடன் சுமையால் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். வருமான இழப்பு, கடன் பெற்று தொழில் துவங்கிய பலரும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஆகியவற்றால் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம் இரும்புபாலம் அருகில் பேக்கரி நடத்தி வந்த வினோத், 23, கடன் சுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், கடந்த 3 மாதங்களில், பாலக்காட்டில் ஒளி மற்றும் ஒலி கடை உரிமையாளர் பொன்னுமணி, இடுக்கியில் ஏலக்காய் விவசாயி சந்தோஷ், மனோஜ், அவரது மனைவி, திருவனந்தபுரத்தில் தனியார் பஸ் டிரைவர் சரத், திருச்சூரில் உள்ள அவரது தந்தை தாமோதரன் என, 30க்கும் மேற்பட்டோர் ஊரடங்கால் வியாபாரம் மற்றும் தொழில் பாதிப்பால் தற்கொலை செய்துள்ளனர்.
இதேபோல், கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையின் போது, திஷா என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2020ல் ஜனவரி முதல் ஜூன் வரை, 13 - 18 வயதிற்கு உட்பட்ட 176 பேர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.