வாகை மரத்திலிருந்து குடம் குடமாக கொட்டிய தண்ணீர்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள துரைசாமி நகரில் வாகை ரகம் மரத்திலிருந்து திடீரென தண்ணீர் வரத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்வையிட்டு சென்றனர்
அதேபோல மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும் என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் தானாகவே நின்று போனது இது ஒரு அதிசய நிகழ்வாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரத்திலிருந்து தண்ணீர் வரும் வீடியோ வைரலானது. மரத்திலிருந்து சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கும்.
அந்த நீர் கூட வெளியேறியிருக்கலாம் என்றனர். வாகை மரத்திலிருந்து வரும் தண்ணீர் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் " மரத்தின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தின் பேரில் மரத்தில் இருந்து தண்ணீர் வந்துள்ளது என தெரிவித்தனர். இத்தனை விளக்கங்கள் இருக்க மக்கள் மரத்திலிருந்து தண்ணீர் வந்துவிட்டதாக ஆச்சரியப்பட்டனர்.
பொதுவாக மட்டி வகையை சேர்ந்த மரங்கள் தனது பெரிய தண்டுகளில் தண்ணீரை சேமிப்பதாக சொல்லப்படுகிறது. தண்டு பகுதியை லேசாக வெட்டினால் அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது. பல சமயங்களில் காடுகளில் பயணம் மேற்கொள்பவர்களின் தாகத்தை இந்த மரங்களில் தீர்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இது போன்ற மரங்களை அரசு பூங்காக்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயிரிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இன்னொன்று முதலை கட்டை மரம் என்ற ஒரு மரமும் இது போல் தண்ணீரை சேமிக்கும் திறனுடையது. அந்த மரத்தின் பட்டைகள் கரடுமுரடாக முதலை தோல் போல் இருக்கிறது.
இதற்கு விஞ்ஞான பெயர் டெர்மினாலியா எலிப்டிகா ஆகும். இந்த மரத்தின் பட்டையை மரவெட்டியால் ஓங்கி அடித்தால் அதிலிருந்து தண்ணீர் பிய்த்து கொட்டுகிறது. மிக வறட்சியான நேரங்களில் இந்த மரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். இந்த மரத்தில் எந்த முறை மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என தெரியவில்லை. இதுபோல் வரும் நீர் சிறிது காலத்திற்கு அப்படியே இருக்கும். பின்னர் அதுவாக வறண்டுவிடும். இந்த மரம் பொதுவாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய இடங்களில் வளரும். இந்த மரங்கள் தீத்தடுப்பானாகவும் உள்ளது. கோடை காலங்களில் இந்த மரத்தில் உள்ள நீரை வனத்துறை அதிகாரிகள் குடிப்பர். இந்த தண்ணீரை குடித்தால் வயிற்று வலியை குறைக்கும் என்கிறார்கள். இயற்கை எத்தனை அற்புதமான ஒரு படைப்பை கொடுத்துள்ளது. ஆனால் நாம் தாம் அதன் அற்புதங்களை தெரிந்து கொள்ளாமல் மரங்களை வெட்டி காட்டை அழித்து வருகிறோம்.