இன்று சுவாமி ஞானப்பிரகாசர் பிறந்தநாள் 30-8-2021
கால்டுவெல் வழிநின்று தமிழைப் பிறமொழிகளோடு ஒப்பிட்டு உலகத் தலைமொழி தமிழே என்பதை நிறுவியவர்.
பன்மொழி பயின்றவர். தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வில் 1920-களிலிருந்தே ஈடுபட்டுப் பல ஆண்டுகள் உழைப்புக்குப்பின் சொற்பிறப்பியல் அகரவரிசைப் பெருநூலை வெளியிட்டவர்.
தமிழ் அமைப்புற்ற வரலாறு, தமிழரின் பூர்வ சரித்திரம் அரிய நூல்களை எழுதியவர்.
இவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மானிப்பாய் என்னும் ஊரினர். கி.பி.1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.
இளமையிற் பொதுக்கல்வியும் பின்னர் இறையியற் கல்லூரியிலும் பயின்று குருத்துவப் பட்டம் பெற்ற கத்தோலிக்கக் கிறித்துவர்.
யாழ்ப்பாணம் நல்லூரிற் கத்தோலிக்கக் குருவராகப் பணி செய்தவர். தமிழின் மீது தணியாப் பற்ருக் கொண்ட இவர் பன்மொழி வல்லாராகத் திகழ்ந்தார்.
வடமொழி, ஆங்கிலம், இலத்தீன், ப்ரெஞ்சு முதலாம் இருபதுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றவர்.
இவர் பன்மொழி ஆய்வு தமிழொடு பிறமொழிகளை ஒப்பிட்டு ஆராயும் விருப்பத்தை நல்கியது.
தமிழின் வேர்ச்சொற்களும், வழங்கு சொற்களும், முறைப்பெயர்களும் எவ்வெம் மொழிகளில் அமைந்திருக்கிறது எனத் துருவித் துருவி ஆராய்ந்தார்.
தாம் அறிந்த மொழிகளின் வழியாக, எழுபத்து மூன்று மொழிகளை ஒப்பிட்டுத் தமிழின் பழமை, அடிச்சொல் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தார்.
அவர் ஆங்கிலக் கிறித்தவர் கால்டுவெல் செய்த ஒப்பியல் இலக்கணம் கண்டு உரைத்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போல உலக மொழிகளுக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள ஒப்பியல்களை ஆய்ந்து நூலாக்குவதைத் தம் இன்பப் பொழுது போக்காகக் கொண்டார்.
ஞானப்பிரகாச அடிகள் ஆய்வு புதுமையானது. அதனைப் புரிந்துகொண்டு போற்றுவார் அரியர். அத்தகைய ஆய்வு மேற்கொண்டோரும் அக்காலத்தில் இல்லை.
தவத்திரு மறைமலையடிகளார் மகளார் தமக்கு இச்சொல் எம்மொழிச்சொல் என்று கண்டுபிடிப்பதில் ஐயம் உண்டாகியபோது அதனை நீக்கிக் கொள்வதற்கு ஞானப்பிரகாச அடிகளார்க்கு எழுதிக்கேட்டு அவர் மறுமொழி கொண்டு சில சொற்களை முடிவு செய்தார் என்பதைத் தம் வடசொல் அகரவரிசை என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
கால்டுவெலார்க்குப் பின்னர் தமிழ் வேர்ச்சொல் ஆய்வைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்ந்து நூலாக்கம் செய்தவர் ஞானப்பிரகாச அடிகளே!
அவருக்குப்பின் தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் ஆழங்கால்பட்டுப் பல்லாயிரம் சொற்களின் வேர், அடிவேர், பக்கவேர், சல்லிவேர், வேர்த்திரிபு என்பவற்ரை ஆராய்ந்த மொழி ஞாயிறு பாவாணர், கல்டு வெல்லார், ஞானப் பிரகாசர் ஆய்வுகளை மேலாய்வு செய்து புத்தம் புதுவழிகாண, இந்திய மொழியாய் வரும் படிப்படியே தம் ஆய்வுகளால் ஒப்புக்கொண்டு, “உலக முதன்மொழி தமிழ்” என்பதை ஏற்றுப் போற்ற மூல ஆய்வராக விளங்கியவர்கள், கால்டுவெல்லாரும் ஞானப்பிரகாசரும் ஆவர். இவ்வகையால் தமிழின் உண்மை காண உதவியவர் அவர் ஆனார்.
ஞானப்பிரகாசர் காலம் ஆங்கிலர் ஆட்சிபுரிந்த காலம். அவர்கள் தொடர்பும் வாய்ப்பாக அமைந்த சமயச்ச் சார்பு. ஆகையால், ஞானப்பிரகாசர் ஆய்வுக்கும் ஆய்வு வெளியீட்டுக்குமாக ஆண்டுக்கு உருபா இரண்டாயிரம் வழங்கிவந்தது அரசு.
இவ்வாய்ப்பால் தமிழ் அமைப்புற்ற வரலாறு, தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி என்னும் நூல்களைச் செய்தார்.
தமிழ் ஒப்பியல் அகராதியில் இலத்தீன் கிரீக்கு, காதிக் ( GOTHIC ), சுமேரியம், ஹிட்டைட், வடமொழி முதலிய மொழிகளில் தமிழ்சொற்களும் அவற்றின் மூலங்களும் விரவிக் கிடத்தலை ஆராய்ந்து காட்டினார். நூலாகவும் ஒன்றிரண்டு பகுதிகளை வெளியிட்டார்.
தமிழ் அமைப்புற்ற வரலாறு என்பது மொழியின் முன்னை நிலை, அதன் சொல்லுருவாக்கம், அடிநிலைச் சொற்கள், இலக்கிய வழக்கிற்கு முன்னை மக்கள் வழக்கில் வளர்ட்ந்த வகை, மூலச் சொற்கள், மொழியாக உருக்கொண்ட முறை என்பவற்றை விளக்கிக் கூறும் நூலாகும்.
அக்காலத்தில் அவ்வாய்வை அறிஞர்களும் புரிந்து கொண்டு போற்றமாட்டாத நிலைமையினால் அவர் ஆய்வுகள் முழுதுற முடியவும் அச்சிடமுடியாமலும் தடையுற்றன. பின்னே நூலாக்கம் பெற்றனவும் உண்டு. அடிகள் கி.பி. 1947 -இல் ஒளி வடிவு கொண்டார்.