குழந்தையை தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் சிறை
பெற்ற குழந்தையை தாயே சித்ரவதை செய்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தாய் துளசியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி மதுரா, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி, 22 என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல், 4; பிரதீப், 2 என இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ஒன்றரை மாதத்திற்கு முன் வடிவழகன், மனைவி துளசியை மட்டும் அவரது தாய் வீடான சித்துாருக்கு அனுப்பி விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், துளசி விட்டுச் சென்ற மொபைல் போனில் இருந்த 'வீடியோ'க்களை வடிவழகன் பார்த்துள்ளார்.
அதில், கடந்த பிப்ரவரி மாதம் துளசி, குழந்தை பிரதீப்பின் வாயில் பல முறை குத்தி ரத்தம் சொட்டும் காட்சியும், குழந்தையின் பாதத்தில் தொடர்ந்து பல முறை குத்தியதில் கால் எலும்புகள் உடைந்து குழந்தை துடிதுடிக்கும் வீடியோக்கள் இருந்துள்ளன. இது குறித்து வடிவழகன் அளித்த புகாரின் பேரில், கையால் தாக்குவது, சித்ரவதை செய்வது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கொடூரமாக தாக்குவது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், துளசி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்த துளசியை நேற்று சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து, சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன் மீதுள்ள வெறுப்பினால்தான் குழந்தையை தாக்கியதாக துளசி வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் துளசிக்கு மன நல பாதிப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, துளசியை வரும் 13-ம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.