சென்னையில் உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக மறுசுழற்சி செய்யும் திட்டம்
உலகில் உள்ள மற்ற நாட்டினரைப் பார்க்கிலும், இந்தியர்கள் அதிக அளவில் பொரித்த உணவுகள் மற்றும் எண்ணெயில் செய்த பலகாரங்களை எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஓராண்டுக்கு இரண்டாயிரத்து 466 கோடி லிட்டர் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால், புற்று நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் நிலையில், அதன் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, ஒருமுறை உபயோகிக்கப்பட்ட எண்ணெய்யிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரவாயலில் இயங்கி வரும் Envo Green எனும் நிறுவனம், சென்னையில் உள்ள 123 ரெஸ்டாரெண்ட்கள், 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சிறு கடைகளில் இருந்து உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து வருகிறது.
உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெயை ஒரு லிட்டர் 30 முதல் 35 ரூபாய் வரை கொடுத்து வாங்கப்படுகிறது. ஹோட்டல் மட்டுமின்றி, கேன்டீன்கள், நொறுக்குத் தீனி தயாரிக்கும் இடங்களில் இருந்தும் உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் சமையல் எண்ணெய் லாரி மூலம் ராணிப்பேட்டையில் உள்ள ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டு, பயோ டீசலாக மாற்றப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெயில் 85% பயோ டீசல் கிடைக்கிறது. பயோ டீசல் சூழலுக்கு குறைந்த அளவே மாசு ஏற்படுத்தும் நிலையில், இத்திட்டம் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.