ஒலிபரப்பாளர் கே எஸ் ராஜா நினைவு நாள் இன்று
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா என்ற இயற்பெயர் கொண்ட கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட கே.எஸ்.ராஜா அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக்கொண்டவர். அங்கிருந்து பின்னர் யாழ்ப்புறநகர்ப்பகுதியான கொட்டடியில் வசித்துவந்த இவர், இலங்கைவானொலியில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தினை கொண்டவராக குறுகிய காலத்தினுள் அனைவரினதும் இதயத்தை கவர்ந்தவர்.
கம்பீரமான, வேகமான மிகத்தெளிவான உச்சரிப்பில் இவரது குரல் ஒலிக்கும்போதே வானொலியை நோக்கி மக்களை செல்லவைத்த வித்தகர் இவர்.
ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கேயான இந்தப்பாணியினை நடைமுறைப்படுத்தியிருந்தாரா? என்ற கேள்வி எனக்குள்ளே பல ஆண்டுகளாக குடியிருந்தது. நீண்டநாள் இந்தக்கேள்வியை தீர்த்துவைத்தவர் திரு.அப்துல் ஹமீத் அவர்களே. ஊடகப் பயிற்சி அரங்கு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வந்திருந்த ஹமீத் அவர்களிடம் திரு.கே.எஸ்.ராஜாவை பற்றிய சில கேள்விகளை அவரது பக்கத்தில் இருந்து பணிபுரிந்தவர் என்ற ரீதியில் அவரிடம் நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பதிலளித்த ஹமீத் அவர்கள், கே.எஸ்.ராஜா அவர்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு உரியது என்ற பாணியில் அறிவுப்புக்களை செய்யவில்லை எனவும். ஒருநாள் இரவு தாம் இருவரும் நெடு நேரமாக அறிவுப்பு குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிவிட்டு சென்றதாகவும். மறுநாள் காலை கே.எஸ்.ராஜா அவர்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்ததாகவும், அன்று காலை எதேட்சையாக வானொலியை திருப்பியபோது தமக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும், வேகமான தொனியில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில், கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக்கொண்டிந்ததாகவும், யாராவது புதிய அறிவிப்பாளர் ஒருவர் வந்துவிட்டாரா? என தான் யோசித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சி முடிவில் “அன்பு வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் கே.எஸ்.ராஜா” என்று புதிய தொனியில் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் உட்பட சக அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவிடம் இந்த வித்தியாசமான தொனி அறிவிப்பு குறித்து விவாதித்ததாகவும், எனினும் அடுத்து வந்த வாரங்களில் கே.எஸ்.ராஜா அவர்களுக்கு பெருமளவிலான பாராட்டுக்கடிதங்கள் வந்து குவியத்தொடங்கியதாகவும் அப்போதே அவர் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதை தான் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது. நீயா திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றில் அந்த திரைப்படத்தில் இச்சாதாரிப்பாம்பாக சிறீப்பிரியா மற்றும் கணேஸ் தோன்றும் காட்சியில் மனிதரூபம் கொண்ட பாம்பு என்று தெரியாமல் ஆண்பாம்பினை கமல் ஹாசன், வியஜகுமார் குழுவினர் சுட்டுக்கொல்லும் கட்டத்தில், குற்றுயிராக கிடக்கும் தமது ஜோடியை மடியில் தூக்கிவைத்து சிறீப்பிரியா கதறும், “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” என்ற வசனத்தை இறுதியில் ஒலிக்கவைத்துவிட்டு. இல்லை நேயர்களே உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெறுவது அதிசயிக்கவைத்தது.
அது மட்டுமின்றி அண்மையில் இராமேஸ்வரம் சென்றபோது நான் சந்தித்த ஒரு வயதான இளைப்பாறிய அதிபர் ஒருவர். என்னுடன் நீண்டநேரமாக அளவலாவியபோது கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கு தான் பரம இரசிகர் என்பது மட்டும் இன்றி அவர் பற்றிய பல தகவல்களையும் உட்சாகத்துடன் தெரிவித்தார். கே.எஸ்.ராஜா அவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றை தாம் ஒலிப்பதிவு செய்து தற்போதும் பொக்கிசமாக வைத்திருப்பதாக தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு சென்னையில் தான் அவரை சந்தித்து பலமணிநேரம் கே.எஸ்.ராஜாவுடன் உரையாடியதாகவும் அந்த நாளை இன்னும் தன்னால் மறக்கமுடியாது என்றும் தெரிவித்ததுடன் எனக்கு தெரியாத பல விடயங்களை என்னிடன் அவர் பேசியது என்னை பிரமிக்கவைத்தது.
கே.எஸ்.ராஜா பற்றியும், கே.எஸ்.ராஜாவுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒலிப்பதிவினையும், விளம்பர ஒலிப்பதிவு சிலவற்றையும் நண்பர் யாழ் சுதாகர் அவர்கள் http://madhurakkural.blogspot.com/ என்ற வலையமைப்பில் பதிந்துவைத்துள்ளார். கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி தெரியாத இன்றைய இளம் அறிவிப்பாளர்கள், இளையவர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து கே.எஸ்.ராஜாவின் மதுரக்குரலினை செவிமடுத்துக்கேட்டு, பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
1989ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.