மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் ஆசிரியர் தினத்தன்று வாழ்த்து

#India #M. K. Stalin
மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் ஆசிரியர் தினத்தன்று வாழ்த்து

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

செப்டம்பர் 5-ம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வி யுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள்! பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள்! இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்!

ஆசிரியப் பணி என்பது ஏட்டுக்கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று. அது, மனிதர்களை -  அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி; புனிதப் பணி!

கைதேர்ந்த சிற்பிகளால் தான் கல்லையும் சிலையையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையைக் கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளைப் புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார்.

உழவர் மேடு பள்ளங்களைச் சமன்செய்து நீர் பாய்ச்சி, உழுது உரமிட்டுப் பயிர் செய்து அறுவடை செய்கிறார். ஆசிரியர் ஏற்றத்தாழ்வும், அறிவின்மையும், வறுமையும் உடைய மாணவர்களின் மனதைப் பண்படுத்தி அவர்களிடமிருந்து அறிவை அறுவடை செய்கிறார்.

மாணவர்களை அறியச் செய்து, நேர்மை, ஒழுக்கம், உண்மை என்ற அறநெறிகளில் பிறழாது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாக உருவாக்கும் தன்முனைப்போடு செயல்பட வேண்டுமாய் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னரும் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று இன்புறச் செய்யும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:-

ஆசிரியர், பெற்றோர், மாணவர் என்ற முக்கோண வடிவத்தில் முதன்மையானவர் ஆசிரியர். ஒரு தாய் பிள்ளைகளை எப்படி வேறுபடுத்தி பார்ப்பதில்லையோ, அதே போல் ஆசிரியர் தன்னிடம் பாடம் பயில வரும் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

மாணவ, மாணவியரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

நாட்டின் அறிவு வளத்தை உருவாக்கும்  அற்புதமான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னிடம் கல்வி கற்றவர்கள் தம்மைவிட பலமடங்கு  உயர்ந்து நின்றாலும் எந்தவித மாற்று எண்ணமும் இன்றி அவர்களை பெருமையோடு கொண்டாடி மகிழும் உயர்குணம் நிறைந்தவர்கள் ஆசிரியர்கள்.

சிறப்பு வாய்ந்த இந்நாளில் என்னுடைய ஆசிரியர்களை நன்றியோடு வணங்கி, மனித குலத்திற்கு ஏணியாக, தோணியாக திகழும் ஆசிரியர் சமுதாயத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!