பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதி திராவிடர் நல விடுதியில் சமையலராக வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஆந்திராவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்ததால் கடந்த மாதம் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ஆந்திராவில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா பாதித்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அடுத்த குரபல கோட்டா பகுதியில் மாணவர்கள் தங்கி படிக்கும் அரசு விடுதியுடன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதி திராவிடர் நல விடுதியில் சமையலராக வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 மாணவர்களுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் விடுதி மூடப்பட்டு அங்கு தங்கி இருந்த மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் சித்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மண்டலம் கம்மபல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல், தொண்டை வலி இருந்தது.
மாணவர்கள் 2 பேருக்கும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் படித்த அதே வகுப்பை சேர்ந்த மேலும் 18 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தனர்.
இதன் பின்னர் பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் 31 பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.