அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய தொழில்நுட்பம்
ஐபோனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளை அமெரிக்காவில் உள்ள எட்டு மாகாணங்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் ஆப்பிள் வேலட் செயலியில் அடையாள அட்டைகள் சேமித்து வைக்கப்படுவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் விளக்கக் காட்சி ஒன்றில் அறிவிக்கப்பட்டது.
காவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஸ்மார்ட்ஃபோன்களை கொடுப்பது குறித்து தனியுரிமை சிக்கள்களை சிலர் வெளிப்படுத்தினர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் ஆப்பிள் ஐபோன்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது ஆப்பிள். அவ்வளவு ஏன் ஐபோனை அன்லாக் கூட செய்ய வேண்டாம் என கூறுகிறது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் கூறியது போல ஐபோனை அன்லாக் செய்யவோ, அதிகாரிகளிடம் கொடுக்கவோ அவசியம் இல்லை.
ஆனால் சாலையில் காவலர்களால் நிறுத்தப்பட்டால் அப்போது இந்த பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி செயல்படும், காவலர்கள் எப்படி அந்த நபரின் அடையாள அட்டைகளைப் பார்ப்பார்கள் என்கிற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பாதுகாப்பு சாவடிகள்
விமான நிலையத்தில், அடையாள அட்டைகளை கிரகிக்கும் இயந்திரங்களில் ஐபோனை டேப் செய்தால் போதும், உங்கள் முகம் வழியாகவோ (Face ID) அல்லது கை ரேகை (Fingerprint ) மூலமாகவோ பயனர்களிடம் அனுமதி பெறப்பட்டு, அடையாள அட்டை விவரங்கள் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தினரிடம் சென்று சேர்ந்துவிடும்.
"இதற்கு பயனர்கள் தங்கள் ஐபோனை திறக்கவோ, அதிகாரிகளிடம் காட்டவோ, தங்கள் ஐபோனை அதிகாரிகளிடம் கொடுக்கவோ தேவை இல்லை" என கூறியுள்ளது ஆப்பிள்.
இந்த புதிய முறை பாதுகாப்பு நடைமுறையை தடையற்ற வேகமான அனுபவமாக்கும் என கூறியுள்ளார் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அமைப்பைச் சேர்ந்த டேவிட் பெகொஸ்கே.
கொரோனா பாஸ்போர்ட்
ஆப்பிளின் இந்த புதிய செயலி "மேம்பட்ட பாதுகாப்பையும், வழக்கமாக பயன்படுத்தும் பணப்பைகளை விட கூடுதல் தனியுரிமை வசதிகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளது ஆப்பிள்.
எல்லா தரவுகளும் என்கிரிப்ட் (மறையாக்கம்) செய்யப்படும் என்று கூறுகிறது ஆப்பிள், ஆனால் ஆப்பிள் நிறுவனமோ அல்லது மாகாண அதிகாரிகளோ இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாகவே டிஜிட்டல் அடையாள அட்டை என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட கொரோனா பாஸ்போர்ட் நினைவிருக்கலாம். அதன் தொடக்கத்தில் தனியுரிமை பிரசாரகர்களால் அது பெரிதும் விமர்சிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
"டிஜிட்டல் அடையாள அட்டைகள் என்பது தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கலாம். ஒவ்வொரு முறை ஒரு கதவைக் கடக்கும் போதும், காபியை வாங்கும் போது, அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது" என டிஜிட்டல் உரிமை குழுவான எலெக்ட்ரானிக் ஃப்ரான்டியர் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு கூறியுள்ளது.