கொரோனா ஓயாத நிலையில் மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்

Prasu
3 years ago
கொரோனா ஓயாத நிலையில் மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்

கொரோனா தொற்றே இன்னும் கேரளாவில் ஓயாத நிலையில், 2018ம் ஆண்டில் கேரளாவை உலுக்கிய நிபா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நிபா வைரஸ் எப்போதெல்லாம் பரவியது, வைரஸ் தொற்றின் அறிகுறி தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்வோம்.

நிபா வைரஸ் என்பது அடிப்படையில் பழந்தின்னி வவ்வால்கள்(வௌவால்)மூலம் மனிதர்கள் மற்றும் பன்றிகளுக்கு பரவும் கிருமியாகும்.

கடந்த 1998ம் ஆண்டில் முதன்முதலாக மலேசியாவில் பன்றிகளிடம் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக 2001ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் இந்த வைரஸால் 66 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 45 பேர் உயிரிழந்தனர்.

2007ம் ஆண்டும் மேற்குவங்க மாநிலம் நாடியா என்ற இடத்தில் நிபா பாதிப்பு ஏற்பட்டது. இம்முறை தொற்று பாதித்த 5 பேரும் உயிரிழந்தனர்

சரியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கி அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர்.

2019ம் ஆண்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. கிருமியுடன் தொடர்பு ஏற்பட்ட 4 முதல் 14 நாட்களுக்குள் உடல்நலம் பாதிக்கப்படும். 3 முதல் 14 நாட்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல் அதீத மூச்சுத்திணறல் ஏற்படும்.

நிபாவால் மூளையில் வீக்கம் ஏற்பட்டால் வலிப்பு ஏற்படுவதுடன், 24 முதல் 48 மணி நேரத்துக்குள் கோமா நிலைக்கும் பாதித்தவர்கள் செல்வார்கள். இறுதியில் மரணமும் நிகழ வாய்ப்பு உள்ளது.

உடல்நலம் பாதித்த பன்றிகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பை தவிர்த்தால் இந்த நோயில் இருந்து தப்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மரங்களில் இருந்து வௌவால்கள் சாப்பிட்டு, கீழே விழும் பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நிபா வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்தோ, தடுப்பூசியோ இல்லை. மூச்சுத்திணறல் மற்றும் நரம்பியல் பிரச்னைகளுக்கான மருந்துகள் மூலம் மட்டுமே இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.