நிபா வைரஸ் பரவியது எப்படி..? -ரம்புட்டான் பழம் ஆய்வு

Keerthi
3 years ago
நிபா வைரஸ் பரவியது எப்படி..? -ரம்புட்டான் பழம் ஆய்வு

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5, 2021) காலை இறந்தார்.

கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் (Nipah virus) பாதிப்பால் இறந்ததாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  இதை அடுத்து சுகாதார அமைச்சர் இன்று கோழிக்கோடு செல்கிறார். "இதுவரை,  நிபா வைரஸால் இறந்த சிறுவனது குடும்பத்தினருக்கோ அல்லது அவருடன் தொடர்பில் வந்த வேறு எவருக்குமோ, எந்த அறிகுறிகளும் இல்லை. நான் இன்று கோழிக்கோடு செல்கிறேன், அமைச்சர் PA முகமது ரியாஸும் என்னுடன் வருகிறார் " என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

இதற்கிடையில், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்தது. மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) குழுவை மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பியுள்ளது.

புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சிறுவனின் பரிசோதனை மாதிரிகள், நிபா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தின. கேரள மாநிலத்திற்உ விரைந்துள்ள, மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஒரு குழு தேவையான உதவிகளை வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமம், குறிப்பாக மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரிசோதனைகள் நடத்துவது உள்ளிட்ட சில உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிபா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து மாநில அரசு சனிக்கிழமை இரவு சுகாதார அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியதாக சுகாதாரத் துறை  கூறியது.

நிபா வைரஸ் இருப்பதை மாநில அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை காலை கோழிக்கோட்டுக்கு விரைந்து சென்று நிலைமையை அறியலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பழ வெளவால்களின் உமிழ்நீர் மூலம் நிபால் வைரஸ் பரவுகிறது.

தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் நோய் (NiV) பரவல் மே 19, 2018 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பதிவானது. ஜூன் 1, 2018 வரை மாநிலத்தில் 17 இறப்புகள் மற்றும் 18 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.