மாணவருக்கு கொரோனா பாதிப்பு- சென்னையில் பள்ளிக்கூடம் மூடப்பட்டது!!
கரூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து கடந்த 1-திகதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை தினமும் 50 சதவீதம் என சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படத்தொடங்கி உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் கோவை மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 2,100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பண்ருட்டி அருகே மேல் பட்டம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவருக்கு தொற்று ஏற்பட்டது. உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவிக்கும் தொற்று பரவியது.
புதுக்கோட்டை மாவட்டம் முல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
இந்த நிலையில் சென்னை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள அந்தப்பள்ளி மூடப்பட்டது.
அந்த மாணவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதன்பிறகு அந்த மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாணவருக்கு தொற்று பரவியதால் அந்த பள்ளிக்கூடம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதேபோல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு தொற்று பரவியது.
அதேபோல் கரூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
கடந்த 1-திகதி பள்ளி தொடங்கியதில் இருந்து இதுவரை 15 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.