பிரதமர் மோடியுடன் ரஷிய பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை
ஆப்கான் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவால் ஆகியோரை ரஷிய பாதுகாப்பு செயலாளர் சந்தித்து பேசினார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு புதிய அரசு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள சூழ்நிலைகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆப்கான் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஆப்கான் விவகாரம் தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே உயர்நிலையாளர்கள் அளவில் ஆலோசனை நடத்துவதற்காக ரஷியா பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ்வை இந்தியாவுக்கு வருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று 2 நாள் பயணமாக ரஷியா பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் நேற்று மாலை இந்தியா வந்தார்.
டெல்லி வந்திருந்த அவர் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவால் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதில் இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கடந்த 24-ந் திகதி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...50 ஆண்டுக்குப் பிறகு ஓவல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி - பிரதமர் மோடி பாராட்டு