கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.40 உயர்வு- மத்திய அரசு நடவடிக்கை
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது.
அந்தவகையில் சம்பா மற்றும் குறுவை பருவங்களில் 23 பயிர்களுக்கு தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வருகிறது.
குறுவையை பொறுத்தவரை கோதுமை மற்றும் கடுகு போன்றவை முக்கியமான பயிர்களாகும். இந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் நடப்பு (2021-22) பயிர் ஆண்டு மற்றும் 2022-23 சந்தை பருவங்களுக்கான 6 குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் முக்கியமாக கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,975-ல் இருந்து ரூ.2,015 ஆக உயர்ந்திருக்கிறது.
இதன் மூலம் கோதுமையின் உற்பத்தி செலவு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,008 ஆக மதிப்பிடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.