தமிழரும் தாலியும் - தாலிகட்டும் பழக்கம் ஏன் வந்தது?
உயிரினங்கள் இணை சேரும் போது அதற்காக எந்த அடையாள சின்னங்களையும் அணிவதில்லையோ அதேபோல் ஆதி மனிதனும் அணிந்திருக்க மாட்டான். மனிதன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்தில் (அதற்கு முன்பு கூட இருக்கலாம்) மொழி பரிணமித்து தமிழ் மொழியும் பேசப்பட்ட குழுவில் திருவள்ளுவர் என்ற ஒரு மனித தெய்வம் இப்படித்தான் வாழ வேண்டும் என எழுதி வைத்தது.
விலங்குகளாக இருந்து பரிணமித்ததால் எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்வது, களவாடுதல், கள்ளுண்ணுதல், புலால் உண்ணுதல் போன்றவை இயல்பாக இருந்திருக்கும்.
திருவள்ளுவர் போன்றோர் பிறன் மணை நோக்காதே, களவாடாதே, புலால் உண்ணாதே என தமிழர் பண்பாட்டை கட்டி அமைத்தனர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு அப்போது தான் நடைமுறைக்கு வந்திருக்கும்.
திருமணம் ஆகாத பெண்ணையே காதலிக்க வேண்டிய பண்பாடும் வந்திருக்கும். ஆகவே திருமணம் ஆன பெண் மற்றும் ஆணுக்கு அடையாளம் தேவைப்பட்டிருக்கும்.
திருமணம் ஆன பெண் தன் கணவன் வீரமானவன், தனிச்சிறப்பு மிக்கவன் என்று காட்ட அவனது சாகசத்தில் கிடைத்த அடையாளத்தை தன் கழுத்தில் அணிந்து பெருமைப் பட்டிருப்பாள்.
வீரன் கொன்ற புலியின் பல் அல்லது நகம், அல்லது வேறு கொடிய மிருகங்களை கொன்று அந்த மிருகங்களின் பல் நகம் எலும்பு போன்றவற்றை தன் மனைவிக்கு அணிந்து கொள்ள அளித்திருப்பான், அல்லது அணிவித்திருப்பான். இந்த பரிணாமம் நாளடைவில் வீர சாகசம் செய்த பின்னரே திருமணம் என மாறியிருக்கலாம். காளையை அடக்குவது கூட அப்படி வளர்ந்த பண்பாடாக இருக்கலாம்.
காளைகளை கொல்லக் கூடாது என்று கட்டுப்பாடு ஏற்பட்டு, அந்த நிகழ்வில் பரிசாக கிடைத்ததை மனைவிக்கு பரிசாக - பரிசமாக அளித்து - அணிவித்து மனைவியாக ஏற்றிருக்கலாம். ஆண் காலில் மெட்டி அணிவது கூட இதே காரணத்திற்காக இருக்கலாம்.
நாளடைவில் விலங்குகளை கொல்வது பாவம் என்ற கருத்து மேலோங்கி, விலங்குகளின் பல் அல்லது நகம் போல தங்கத்தில் செய்து அணிவிக்கும் பழக்கம் தொடர்ந்திருக்கும்.
பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளை வைத்து காப்பாற்றும் அளவு வசதியானவனா என்பதை அறிந்து கொள்ள தங்கத்தில் தாலி செய்து அணிவிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக ஏற்பட்டிருக்கலாம்.
இந்த பண்பாடு உலகில் எந்த இனத்திலும் இல்லாத தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான உயரிய பண்பாடாகும். அதுவும் ஐயன் திருவள்ளுவ பேராசான் வகுத்த பண்பாட்டைக் காக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக இருக்கிறது.
தாலி அணிவது மூடப் பழக்கங்கள், பெண்களை அடிமைப்படுத்தும் செயல் என வரலாறு தெரியாத சிலர் நவீனத்துவம் என்ற பெயரில் வீண் வாதம் செய்கின்றனர்.
என்னை பொறுத்தவரை ஆண்கள் காலில் மெட்டி அணிவது பெண்கள் தாலி அணிவது நாங்கள் தமிழர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பறைசாற்றும் பண்பாடாகவே பார்க்கிறேன்.