முன்னோர்களின் ஆசிகளை பெற்றுத்தரும் மகாளய அமாவாசை வழிபாடு

Reha
2 years ago
முன்னோர்களின் ஆசிகளை பெற்றுத்தரும் மகாளய அமாவாசை வழிபாடு

மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது.

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள்.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும், முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும், நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. மூதாதையரை நினைத்து காகத்திற்கு உணவளித்து சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
 
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அத்துணை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளயபட்ச விரத நாட்களில் தான்.
 
எனவே, மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.
 
மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோம்.