தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை! - 12 வருடங்களின் பின் நிரபராதி எனத் தீர்ப்பு!

Prasu
4 years ago
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை! - 12 வருடங்களின் பின் நிரபராதி எனத் தீர்ப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாகச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் பி.சி.ஆர். பரிசோதனைகளை அடுத்து இன்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 அன்று - போர் நிறைவுக்கு வந்த பின் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களைச் சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம்,  குறித்த தமிழ் அரசியல் கைதிக்கு எதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சி ஆதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4