சகல பாக்கியங்களையும் தரும் சரஸ்வதி
யாராலும் கொள்ளை அடிக்க முடியாத, அள்ள அள்ள குறையாத அமுத சுரபி தான் கல்வி. செல்வத்துள் குறையாத கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதிக்கு என தனிக்கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள் புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்டது இந்த ஊர். பிற்காலத்தில் இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.
தன்னை தரிசிக்க வரும் மாணவர்களுக்கு கல்வி செல்வத்தை அள்ளி வழங்கி அருள்பாலித்து வருகிறார். தமிழகத்தில் சரஸ்வதிக்கு என தனிக்கோவில் இங்கு மட்டுமே உள்ளது. கருவறையில் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். விஜயதசமி அன்று பல்வேறு ஊர்களை சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல மாணவர்கள் தேர்வு எழுதும் முன் பேனா, நோட்டு, பென்சில் உள்ளிட்டவற்றை சரஸ்வதியின் பாதத்தில் வைத்து வணங்கி எடுத்து செல்வர். இவ்வாறு வணங்கி செல்லும் மாணவர்களுக்கு தடையில்லா கல்வியை வழங்கி வருகிறார் கூத்தனூர் சரஸ்வதி. கல்வி கடவுளான சரஸ்வதி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கு தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை நாம் மனமுருக வேண்டினால் நிறைந்த கல்வி செல்வத்துடன் சகல பாக்கியங்களும் நமக்கு கிட்டும்.