வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் இந்த தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள்!

#spiritual
வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் இந்த தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள்!

வெள்ளிக்கிழமை நம் வீட்டிற்குள் மகாலட்சுமி சந்தோஷத்தோடு காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று வீட்டு வாசலை அழகாக அலங்கரித்து இருப்போம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத சில எதிர்மறை சக்திகள் நம் வீட்டு வாசலில் இருப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. அந்த எதிர்மறை ஆற்றல் மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

கண்ணுக்குத் தெரியாத எந்த சக்தியும், மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைய தடையாக நிற்கக் கூடாது. அதற்கு வெள்ளிக்கிழமை காலையில் எந்த தண்ணீரை வீட்டு வாசலில் தெளிக்க வேண்டும் என்பதை பற்றிய தகவலை தான் இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வியாழக்கிழமை இரவு நீங்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். சிறிய பாத்திரத்திலோ அல்லது ஏதாவது சிறிய சொம்பில் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சளை போட்டு அந்த தண்ணீரை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் வேப்பிலை கிடைத்தாலும் போட்டுக் கொள்ளலாம்.

வியாழக்கிழமை இரவு முழுவதும் இது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். வெள்ளிக்கிழமை காலை விடிந்த பின்பு இந்த தண்ணீரை கொண்டு வந்து உங்கள் நிலை வாசலில் தெளித்து அதன் பின்பு கோலமிட வேண்டும். இந்த உப்பு தண்ணீரை நிலை வாசலில் தெளித்துவிட்டு கோலம் போட்ட பின்பு, வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இரண்டு சிறிய மண் அகல் தீபங்களை உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் ஏற்றிவைத்து வீட்டிற்குள் வாருங்கள். (வாசலுக்கு தண்ணீர் தெளிக்க செல்லும்போதே மண் அகல் விளக்கு, திரி, எண்ணெய் தீப்பெட்டி இவைகளை கவனமாக உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்.) கோலம் போட்டுவிட்டு, தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நிலை வாசலை தொட்டு கும்பிட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்து வந்தாலே போதும். நம் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் இப்படி உப்பு தண்ணீரை வாசலில் தெளித்து கோலம் போடக்கூடாது. வெள்ளிக்கிழமை அன்று மட்டும் இந்த விஷயத்தை பின்பற்றினால் போதும்.

அதன்பின்பு எப்போதும்போல பூஜை அறையில் வெள்ளிக்கிழமை பூஜையை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜையை, பூஜை அறையில் செய்தாலும், வெள்ளிக்கிழமை அன்று நிலை வாசல் படிக்கு என்று தனியாக பூஜை செய்வது வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். நிலை வாசல்படிக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, வாசல்படியில் மஞ்சள் தடவி கோலமிட்டு பூவைத்து கட்டாயமாக அந்தநிலை வாசல் கதவில் இரண்டு பக்கத்திலும் கற்பூர ஆராதனை காண்பித்து தொட்டு வணங்குவது சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது.

இப்படி வெள்ளிக்கிழமை பூஜையை நிலைவாசலில் நிறைவாக செய்து வந்தோமேயானால் உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது. மகாலட்சுமி சந்தோஷத்தோடு வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்வாள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.