நாளை தீபாவளி திருநாள். பூஜைக்கான நல்ல நேரம் என்ன?
நாளை தீபாவளி திருநாள். இந்த தீபாவளி திருநாள் அன்று நம் பாரம்பரிய முறைப்படி நம் வீட்டில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றியும், கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம், வீட்டில் பூஜை செய்ய வேண்டிய நேரம், கேதார கௌரி நோன்பு பற்றிய தாத்பரியம் இவைகளைப் பற்றியும், தீபாவளியோடு அம்மாவாசை சேர்ந்து வருகின்றது அல்லவா, தீபாவளி தினத்தில் முன்னோர்களுடைய வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. குறிப்பாக இந்த தீபாவளி தினத்தில் நாம் செய்யவே கூடாத ஒரு தவறு எது. இந்தப் பதிவின் இறுதியில் உங்களுக்காக.
கங்கா ஸ்நானம்: முதலில் தீபாவளி என்றாலே காலையில் நாம் செய்ய வேண்டிய விஷயம் கங்கா ஸ்நானம். தீபாவளி அன்று அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். பாவங்களுக்கு விமோசனம் தரும் கங்காதேவி, தீபாவளி தினத்தன்று நம் எல்லோரது வீட்டிலும் இருக்கக்கூடிய வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம். நாளைய தினம் தீபாவளி தினத்தன்று எல்லோரும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து நீராடி கொள்ளவேண்டும். இது முதல் விஷயம்.
அமாவாசை தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருக்கும். தீபாவளி தினத்தோடு சேர்ந்து வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் எந்த தோஷமும் கிடையாது. அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
பூஜை செய்யும் நேரம்: முடிந்தவரை நாளை காலை 5.30 க்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பின்பு பூஜை அறையை அலங்கரித்து வைத்து, பூஜை அறையில் குறைந்தது ஐந்து தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதிகபட்சம் உங்களுடைய விருப்பம் எத்தனை தீபங்கள் வேண்டுமென்றாலும் ஒற்றைப்படையில் ஏற்றிக் கொள்ளலாம். காரணம் தீப ஒளியில் கொண்டாடுவதுதான் தீபாவளி.
தீபங்களை ஏற்றி வைத்து விட்டு சுவாமிக்கு முன்பு வாழை இலையை விரித்து தீபாவளிக்கு நீங்கள் செய்த இனிப்பு பலகாரங்கள் அத்தனையையும் அந்த இலையில் வைத்து, புத்தாடைகளை வைத்து, புது துணிகளை வைத்து குல தெய்வத்தையும் உங்கள் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்யவேண்டும். நிறைய பேருக்கு தீபாவளி பண்டிகையின் போது முன்னோர்களின் வழிபாட்டை எப்படி செய்வது என்பதில் சந்தேகம் இருக்கின்றது.
காலை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது சேர்த்து முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது மிக மிக நல்லது
இந்த அமாவாசை தினத்தில் அவரவர் வீட்டு வழக்கப்படி தர்ப்பணம் கொடுக்கும் விஷயத்தையும் மறந்துவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். பூஜையறையில் பூஜையை நிறைவு செய்துவிட்டு நீங்கள் இறைவனுக்காக படைத்த பலகாரங்களை எல்லாம் முதலில் காகத்துக்கு வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.