வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் இருக்க செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இது தான் தெரியுமா?
ஒரு குடும்பம் என்றால் அதில் சண்டை, சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் தொடர்ந்து சண்டை, சச்சரவாக இருந்து கொண்டிருந்தால் அதில் வாழும் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். தாய், தந்தையரை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு சண்டை, சச்சரவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
சண்டைகள் நடக்கும் பொழுது முந்தைய காலத்தில் என்ன செய்வார்கள்? சண்டை நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
குடும்பத்தில் முந்தைய காலங்களில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்தால் அங்கு இருக்கும் குழந்தைகளை முதலில் திசை திருப்பி வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள் மற்றவர்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பெரியவர்களுடைய சண்டைகள் பெரும்பாலும் தெரியாமல் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டனர்.
ஒருவர் இல்லை என்றாலும் இன்னொருவர் அந்த குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இன்றோ குருவிக்கூடு போல ஒரு வீட்டில் இருப்பதே கணவன், மனைவி, குழந்தை மட்டும் தான் என்கிற பொழுது கணவன் மனைவிக்குள் சண்டைகள் வந்தால் குழந்தை என்ன செய்யும்?
உங்களைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனதில் ஒருவிதமான எதிர்மறை எண்ணங்கள் உருவாக ஆரம்பிக்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்கள் நாளடைவில் அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு அதிகரித்து, அவர்களும் இதே தவறை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
காரண காரியம் இல்லாமல் தொட்டதற்கெல்லாம் சண்டை வரும் இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
உங்களை அறியாமல் உங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது என்றால் நீங்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டதும் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி இறை வழிபாடு செய்து பின்னர் உங்களுடைய அங்கங்கள் எட்டும் தரையில் படும்படி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள்.
ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் அவர்களுக்கு உரிய நமஸ்காரமும் செய்து வந்தால் உங்களை அறியாமல் உங்களுக்குள் இருக்கும் ஆணவம், கர்வம், சுயநலம் போன்ற எல்லா கெட்டவைகளும் படிப்படியாக குறைந்து வரும். நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்கிற நினைப்பை அது தூண்டி விடும்.
நமக்கு பெரிதாக கொம்பு ஒன்றும் முளைத்து விடவில்லை, நாம் இந்த பூமாதேவிக்கு அடிமை, இந்த உலகிற்கு அடிமை எனும் பணிவு உண்டாகும். இதனால் அடிக்கடி சண்டை போடும் எண்ணமும் குறையும்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் கதாநாயகன், கதாநாயகி! உங்களுடைய கதையில் நீங்கள் வில்லனாக மாறி விடக்கூடாது என்பதால் எப்பொழுதும் குழந்தைகளுக்கு முன்னால் சண்டையிடுவதை கூடுமானவரை தவிர்த்து பாருங்கள். இருக்கின்ற ஒரு வாழ்வை விட்டுக் கொடுத்து வாழ்வதில் நீங்கள் கெட்டு ஒன்றும் போவதில்லை. ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவரும், மற்றவர் கோபமாக இருக்கும் போது நீங்களும் அனுசரித்து செல்வது தான் வாழ்க்கை என்கிற தத்துவத்தை உணர்ந்து கொண்டால் சண்டை, சச்சரவுக்கு இடமே இல்லை.