இது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு......
70 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்!
சபரிமலையை தமிழகத்தில் பிரபலமாக்கியவர் இவரே!
``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர்.
அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.
இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே.
எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!
யார் குருசாமி?
60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார்.
அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.
ஐயப்பனுக்கு சீசனா?
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?’ என்பார் அவர் பாணியில்.
`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்.
மாதா, பிதா, குரு...
`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார்.
புனித யாத்திரையில் கண்டிப்பு
`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.