பிள்ளையாருக்கு கையில் மோதகம் இருப்பது ஏன்?
கோயில்களில் நீங்கள் பார்க்கும் விநாயகர் படங்களில் அல்லது வீட்டில் வைத்திருக்கும் விநாயகர் படங்களில் அவரது ஒரு கையில் மோதக பேழையிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
விநாயகருக்கு மிகவும் உகந்தது மோதகம் என்ற கொழுக்கட்டை. பிரும்மம் எப்படி சர்வ வியாபியாக விளங்குகிறதோ அப்படி விநாயகர் எங்கும் சர்வ வியாபியாக விளங்குகிறார். அப்படிப்பட்ட விநாயகர் தன் இல்லம் வரும் நாளினை குறிப்பினால் அருந்ததி அறிந்து கொண்டாள்.
பிரும்மம் இந்த கண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்த அருந்ததி இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக்காட்ட விரும்பினாள். அண்டம் என்ற பொருள், பூர்ணமாக நிறைந்திருக்கிறது என்ற பொருளின் உள்ளே அமிர்தமயமான பூர்ணத்தை வைத்து அதை தன் இல்லம் வரும் விநாயகருக்கு படைத்தாராம்.
விநாயகரும் அதனை ஏற்று அருந்ததி தம்பதியருக்கு நல்வரங்களை அளித்தாராம். அந்த தத்துவம் நிறைந்த மோதகத்தை உலகோர் காண ஸ்ரீகணேசர் எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த ஐதீகத்தை வைத்து நாமும் விநாயகர் விசேஷ தினங்களில் அவருக்கு மோதகம் அவித்து, வணங்குவோமாக....